புதிய சுலோகமாகிறது “மெற்றோ-பூளோ- காவ்வு”! (Métro, boulot, caveau !)
Kumarathasan Karthigesu
மக்ரோன் தொடக்கி வைத்த விவசாயக் கண்காட்சியில் ஓய்வூதிய எதிர்ப்புக் கோஷம்.
மக்ரோனின் ஓய்வூதியச் சீர்திருத்த திட்டம் வெளியாகிய பிறகு இந்த மூன்று வார்த்தைச் சுலோகத்தில் டொடொ(dodo) என்பதை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக “நில அறை” அல்லது “சவக்கிடங்கு” என்ற அர்த்தம் தருகின்ற “காவ்வு” (caveau) என்ற சொல்லைப் புதிதாகச் சேர்த்திருக்கிறார்கள். “தொழிலின் முடிவில் நேரே சவக்கிடங்குக்கு” என்ற கருத்தை அது பிரதிபலிக்கிறது.
“மெற்றோ-வேலை-சவக் கிடங்கு” (“Métro, boulot, caveau !”) என்ற அந்தப் புதிய சுலோகம் ஓய்வூதியச் சீர்திருத்தத்தை எதிர்த்து வருகின்ற ஆர்ப்பாட்டக்காரர்களிடையே பிரபலம் பெற்று வருகிறது. தொழிலாளர்கள் இந்த மூன்று வார்த்தைகள் அச்சிடப்பட்ட ரீ-சேர்ட்டுகளை அணிந்து கொண்டு பேரணிகளில் திரண்டு வருகின்றனர்.
நகர வாழ்வின் மாற்ற முடியாத நாளாந்த ஓட்டத்தைக் குறிக்கும் “மெற்றோ – பூளோ – டொடொ”(Métro, boulot, dodo”) என்ற வாசகம் 1951 இல் பியேர் பேர்ண் (Pierre Béarn) என்பவர் எழுதிய கவிதை அடிகளில் இருந்து பெறப்பட்டது. அது பின்னர் 1968 மேயில் பிரான்ஸில் நிகழ்ந்த மாபெரும் மாணவர் – தொழிலாளர் கூட்டுத் தொழிற்சங்கப் போராட்டத்தின் பிரதான சுலோகங்களில் ஒன்றாக மாறியிருந்தது. இப்போது சிறு திருத்தத்துடன் மற்றொரு தடவை தொழிலாளர்களது கோஷமாக அது வடிவெடுத்துள்ளது.
பிரான்ஸில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடைபெற்றுவரும் சர்வதேச விவசாயக் கண்காட்சியை பாரிஸின் போர்த்-து-வேர்சாய் (Porte de Versailles) அரங்கில் அதிபர் மக்ரோன் நேற்றுத் தொடக்கி வைத்தார். காலையில் அரங்குக்கு வருகை தந்த அவர் நாடா வெட்டிக் கண்காட்சி அரங்கைத் திறந்துவைத்த சிறிது நேரத்தில் அங்கு அவர் ஓய்வூதிய சீர்திருத்தத்தை எதிர்க்கின்ற தொழிலாளர்களை எதிர்கொள்ள நேரிட்டது. அவரை நோக்கிக் கோஷங்களும் எழுப்பப்பட்டன.
“64 ஓய்வு வயதல்ல, உயிர்துறக்கும் வயது” என்று தொழிலாளர் ஒருவர் குரல் எழுப்பினார். “மெற்றோ – பூளோ – காவ்வு”! (Métro, boulot, caveau !) என்ற கோஷமும் கண்காட்சி மண்டபத்தில் எதிரொலித்தது.
ஓய்வு பெறும் வயதை 62 இல் இருந்து 64 ஆக உயர்த்துவது உட்படப் பல சீர்திருத்தங்கள் அடங்கிய சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் கடும் விவாதத்துக்கு உட்பட்டிருக்கிறது. சட்டத்தை எதிர்த்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டங்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற விவாதங்களைத் தொடர்ந்து சட்டமூலத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை செனற் சபை பரிசீலிக்கவுள்ளது.