லிஸே மாணவனின் கத்தி வெட்டுக்கு இலக்காகி ஆசிரியை உயிரிழப்பு!

Kumarathasan Karthigesu

வகுப்பறையில் பாட வேளை நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி.

உயர்தர மாணவன் ஒருவனின் கத்தி வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியை ஒருவர் பலத்த காயங்களால் உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸின் தென்மேற்கு Nouvelle-Aquitaine பிராந்தியத்தில் Saint-Jean-de-Luz என்ற இடத்தில் உள்ள செயின்ட் தோமஸ் அக்வினா உயர்நிலைப் பாடசாலையில் (lycée Saint Thomas d’Aquin) இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.

ஸ்பானிய மொழி வகுப்பில் வைத்து ஆசிரியையைக் கத்தியால் வெட்டினார் எனக் கூறப்படுகின்ற 16 வயது மாணவனைப் பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

காலை பத்து மணியளவில் வகுப்பறையில் ஸ்பானிய மொழிப் பாடம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அந்த மாணவன் தனது புத்தகப் பையில் ஒளித்து வைத்திருந்த சுமார் பத்து சென்ரிமீற்றர் நீளமான கத்தியை எடுத்துக் கொண்டு நடுவே வந்து ஆசிரியையின் மார்புப் பகுதியில் வெட்டினார் என்று  கூறப்படுகிறது. அதனை நேரில் கண்ட மாணவர்கள் பதறியடித்துக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். அச்சமயம் வகுப்பறையின் கதவை மூடிய அந்த மாணவன், ஆசிரியையைத் தொடர்ந்து தாக்கியுள்ளார். சிறிது நேரத்தில் அவசர முதலுதவி சேவையினர் அங்கு விரைந்து வந்து ஆசிரியைக்குச் சிகிச்சை அளித்துள்ளனர். ஆயினும் 53 வயதான அவர் இருதயம் செயலிழப்புக் காரணமாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்த மாணவன் என்ன நோக்கத்துக்காக ஆசிரியரை வெட்டினார் என்பது தெரியவரவில்லை சக மாணவர்களது தகவலின் படி கொலையைப் புரிந்த மாணவன் அமைதியான சுபாவம் கொண்ட புத்திசாதுரியமான மாணவன் என்று  சொல்லப்படுகிறது. அவன் மன நோய்ப் பாதிப்பு அறிகுறி எதனையும் கொண்டிருந்ததில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் பொலீஸ் விசாரணைகளின் படி அந்த ரீன் ஏஜ் இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் இதுபோன்ற வன் முறைச் சம்பவங்கள் எதனையும் அறியாத அந்த லிஸே பாடசாலையில் இன்றைய சம்பவத்தால் பெரும் பதற்றமும் பீதியும் ஏற்பட்டது. அங்கு பயிலும் சுமார் ஆயிரத்து 200 மாணவர்களும் சில மணிநேரம் தங்கள் தங்கள் வகுப்பறைகளுக்குள் தங்கியிருந்த பின்னர் வீடுகளுக்குத்  திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அதற்குள் சம்பவம் பற்றிய தகவல் அறிந்து பெற்றோர்கள் பலரும் பாடசாலைக்கு விரைந்தனர்.

படம் :கல்வி அமைச்சர் பேஆபே என்டியே(Pap Ndiaye)

இந்தக் கொடூர சம்பவம் பிரான்ஸின் கல்விச் சமூகத்தினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் அதிர்ச்சியையும் கவலையையும்

வெளியிட்டிருக்கின்றனர்.

கல்வி அமைச்சர் பேஆபே என்டியே (Pap Ndiaye) இந்தக் கொலைச் சம்பவம் குறித்து பெரும் அதிர்ச்சி தெரிவிக்கும் செய்தியைப் பதிவிட்டிருக்கிறார்.

அதில் கொலையுண்ட ஆசிரியரது குடும்பத்தினர், உறவினர்கள், சக ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்திருக்கிறார். சம்பவம் நடைபெற்ற உயர்தரப் பாடசாலைக்கு அவர் உடனடியாக நேரில் சென்றிருக்கிறார்.

உயிரிழந்த ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாட்டின் சகல பாடசாலைகளிலும் நாளை வியாழக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு ஒரு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.