கூகுள் நிறுவனத்தின் இந்திய கிளையில் பணியாற்றி வந்த 453 பேர் பணிநீக்கம்.

கூகுள் நிறுவனத்தின் இந்திய கிளையில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 453 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிநீக்கம் குறித்து ஊழியர்களுக்கு அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.

கடந்த மாதம் ஜனவரி 20 அன்று, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், 12,000 ஊழியர்களை, உலகளவில் அதன் மொத்த பணியாளர்களில் 6% பேரை பணிநீக்கம்  செய்ய முடிவு செய்துள்ளதாக கூகிள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்திருந்தார். இது கடந்த 25 ஆண்டுகளில் கூகுளில் நடந்த மிகப்பெரிய பணிநீக்கமாக கருதப்பட்டது.

இதற்கு முன்னதாக மைக்ரோசாப்ட் 10,000 ஊழியர்களையும், அமேசான் 18,000 பேரையும், மெட்டா 11,000 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்திருந்தது. இந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் இந்தியாவில் உள்ள தனது ஊழியர்களில் 453 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. கூகுள் இந்தியாவின் தலைவரும், துணைத் தலைவருமான சஞ்சய் குப்தா இந்த மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 190 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.