பாரிஸ் புற நகரில் காணாமற்போயிருந்த பெண்ணின் உடலே பூங்காவில் மீட்பு!
Kumarathasan Karthigesu
கைரேகை மூலம் அடையாளம் வட ஆபிரிக்க நாட்டை சேர்ந்தவர்.
பாரிஸ் புட் சுமோ பூங்காவில் (Buttes-Chaumont) துண்டுகளாக மீட்கப்பட்டிருந்த பெண்ணின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாரிஸ் புறநகரப் பகுதியான Seine-Saint-Denis இல் வசிக்கன்ற 46 வயதுடைய – வட ஆபிரிக்க நாடு ஒன்றைப் பூர்வீகமாகக் கொண்ட – பெண் ஒருவரது உடலே அது என்பது கை விரல் மூலம் அடையாளம் காணப்பட்டிருப்பதாகப் பொலீஸார் தெரிவித்திருக்கின்றனர். அந்தப் பெண்ணைக் கடந்த 6 ஆம் திகதி முதல் காணவில்லை என்று அவரது கணவர் பொலீஸ் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்திருந்தார் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கணவரது முறைப்பாட்டின் கீழ் பொலீஸார் பெண்ணைத் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த சமயத்திலேயே அவரது உடல் பூங்காவில் துண்டு துண்டாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் புறநகரில் வசிக்கும் அந்தத் தம்பதியர் இடையே முரண்பாடுகள் எதுவும் இருந்ததாகத் தகவல்கள் இல்லை என்று விசாரணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பாரிஸ் ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
காணாமற்போயிருந்த அந்தப் பெண்ணின் துண்டுகளாக்கப்பட்ட உடற் பாகங்கள் பாரிஸ் 19 ஆவது நிர்வாகப் பிரிவில் உள்ள புட் சுமோ பூங்காவில் மறைவிடங்களில் இருந்து பிளாஸ்டிக் பொதிகளில் மீட்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
திங்களன்று சடலத்தின் இடுப்புப் பகுதியும், மறுநாள் தலை உட்பட இதர பாகங்கள் பலவும் பூங்காவை சல்லடை போட்டுத் தேடிய குற்றவியல் பொலீஸாரால் மீட்கப்பட்டிருந்தன.