பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று பழ. நெடுமாறன் கூறிய விவகாரம் தொடர்பாக பெ.மணியரசன் அறிக்கை.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், காசி. ஆனந்தன் ஆகியோர் நேற்று முன் தினம் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக தெரிவித்தார். அத்துடன், தமிழ் ஈழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் பிரபாகரன் அறிவிக்க இருக்கிறார்.

தமிழ் ஈழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், தலைமறைவிலிருந்து வெளிவந்து தமிழீழ விடுதலை இயக்கத்தைத் தொடங்க இருக்கும் பிரபாகரனுக்கு அவரது லட்சியத் திட்டத்தை வெளியிட சொந்த அமைப்பு இல்லாமலா இருக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்ட காலத்திலும் அது செயல்படாதகாலத்திலும் அந்த அமைப்பின் சார்பில் கருத்துகள், நிலைப்பாடுகள், முடிவுகளை வெளியிடும் அதிகாரத்தை பழ.நெடுமாறன் உள்ளிட்டோருக்கு அவ்வமைப்பு வழங்கியதில்லை என்றும் கூறியுள்ளார்.2009 மே 18-லிருந்து பிரபாகரன் தப்பிச் சென்று உயிரோடிருக்கிறார் என்று பழ. நெடுமாறன் கூறிவருவதாகத் தெரிவித்த மணியரசன், ‘இன்றுவரை பிரபாகரன் வரவில்லை. இப்போது நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இந்தியாவுக்கு எந்த அளவு அதிக விசுவாசத்துடன் பிரபாகரன் இருந்தார் என்று காட்டும் அக்கறையே மேலோங்கியுள்ளது’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை நம்பகத்தன்மை உடையதாக இல்லை எனவும், ‘இது ஆபத்தானது. பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்று வாழ்கிறார் என்பது அவர் மீது தமிழர்களும் பன்னாட்டு மக்களும் வைத்துள்ள பெருமதிப்பைச் சிதைப்பதாக உள்ளது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று உற்சாகத்தோடு தமிழ்நாட்டுத் தமிழர்கள் செயல்படும்போது, பயங்கரவாத அமைப்பை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஆட்சியாளர்கள் அவர்களைச் சிறைப்படுத்த வாய்ப்பிருக்கிறது’ என்றும் அச்சம் எழுப்பியுள்ளார். மேலும், ‘தக்க சான்றுகள் இல்லாமல், பிரபாகரன் வரப்போகிறார் என்று பழ. நெடுமாறன் காசி ஆனந்தன் கூறுவதை அப்படியே ஏற்று ஏமாற வேண்டியதில்லை’ என்று அறிக்கையில் கூறியுள்ளார்.