நேட்டோவின் வெடிமருந்துக் கையிருப்பைக் காலி பண்ணுகிறது உக்ரைன்!!
Kumarathasan Karthigesu
உற்பத்தியை விரைவாக்கி சேமிப்பை உறுதி செய்யக் கோருகின்றார் செயலாளர்.
நேட்டோவின் உறுப்பு நாடுகள் தயாரிக்கின்ற வெடிமருந்து வீதத்தை விடவும் பல மடங்கு கூடுதலான அளவு வெடி மருந்துகள் உக்ரைன் போரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே நேட்டோ அதன் வெடிமருந்துத் தயாரிப்பை வேகப்படுத்திக் கையிருப்பை இட்டு நிரப்ப வேண்டிய அவசியமும் அவசரமும் எழுந்துள்ளது.
-இவ்வாறு நேட்டோ கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் (Jens Stoltenberg) உறுப்பு நாடுகளை எச்சரித்திருக்கிறார்.
உக்ரைனில் நடந்துவருகின்ற போர், மிகப் பெரிய அளவிலான வெடி மருந்தை உள்ளெடுத்துவருகிறது. உக்ரைனின் வெடிமருந்துச் செலவீனத்தின் தற்போதைய அளவு நேட்டோ நாடுகளது வெடிமருந்து உற்பத்தி வீதத்தை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளது. அது எங்கள் பாதுகாப்புத் தொழில் துறைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் எமது உற்பத்தியை அதிகரித்துப் புதிய முதலீடுகளைச் செய்து வெடிமருந்துத் தொழிற் திறனை அதிகரிக்க வேண்டும். -இவ்வாறு அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இந்த மாதம் ஓராண்டை நிறைவு செய்கிறது. இக்காலப் பகுதியில் போரில் குறிப்பிடக் கூடிய பெரிய வெற்றிகளைப் பெறத் தவறிய மொஸ்கோ, வரவிருக்கும் வசந்த காலத்தில் புதிதாகப் பெரும் தாக்குதல்களை ஆரம்பிக்க ஆயத்தமாகி வருகிறது. உக்ரைனுக்கு தங்களது சக்தி வாய்ந்த டாங்கிகள் நீண்ட தூர ஏவாயுதங்கள் உட்பட வலுவான ஆயுத தளபாடங்களை மேற்கு நாடுகள் வழங்கத் தொடங்கியுள்ளன. இதனால் போர் அதன் அடுத்த கட்டப் பரிணாமத்துக்கு விரிவடையும் அறிகுறிகள் காணப்படுவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
எதிர்பார்த்தபடி உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் பெரும் போரைத் தொடக்கியுள்ளன என்று நேட்டோ செயலாளர் நாயகம் ஒப்புக் கொண்டுள்ளார். வாக்னர் தனியார் கூலிப்படைகளது ஒத்துழைப்புடன் அங்கு புதிதாகச் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியிருக்கிறது.
இதற்கிடையில், நேட்டோ நாடுகளது பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ள முக்கிய கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பிரெசெல்ஸ் நகரில் நடைபெறவிருக்கிறது. அதில் உக்ரைனுக்குக் குண்டு வீச்சு விமானங்களை வழங்குகின்ற விடயமும் ஆலோசிக்கப்படவுள்ளது என்று செயலாளர் நாயகம் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியிருக்கிறார்.