யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதிக்கு எதிர்ப்பு போராட்டம்: மேலும் இருவருக்கு நீதிமன்ற அழைப்பாணை.

தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மேலும் இருவருக்கு நீதிமன்ற அழைப்பாணை கையளிக்கப்பட்டுள்ளது.  குறித்த போராட்டம் தொடர்பில் கடந்த 17ஆம் திகதி தவத்திரு வேலன் சுவாமிகளை பொலிஸார் கைது செய்து, விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்றினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டு குறித்த வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க வவுனியா மாவட்ட செயலாளர் சிவானந்தம் ஜெனிட்டா மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவன் மனோகரன் சோமபாலன் ஆகிய இருவரையும் 31ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மூவருக்கும் எதிராக,  சட்டவிரோதமான கூட்டத்தில் உறுப்பினராக இருந்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு காயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டை பொலிஸார் முன் வைத்துள்ளனர்.