சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

நிலத்தடி நீரை உறிஞ்சி மண்ணின் வளத்தை வெகுவாக பாதிக்கும் மரம் தான் சீமை கருவேல மரம். இந்த மரத்தை முழுவதுமாக அகற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருந்தும், இன்னும் முழுதாக அகற்ற முடியவில்லை. இதனை குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரபட்டு இருந்தன. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.அப்போது இது குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதாவது பருவமழை மாற்றம் காரணமாகவும், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இதில் பங்கு கொள்ள ஆர்வமில்லாமல் இருப்பதன் காரணமாகவும், பெரிய இயந்திரங்கள் மூலம் சில சிறிய இடங்களின் உள்ளே சென்று மரங்களை அகற்ற முடியவில்லை எனவும் காரணங்களை கூறி இதனால் காலஅவகாசம் வேண்டும் எனவும் இந்த விசாரணையின் போது உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு எடுத்துரைத்தது. இதனை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, இந்த சீமை கருவேல மரம் என்பது ஒரு நோய் போல பரவி வருகிறது.

இதனை முழுதாக அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்தனர். மேலும், உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு கூறுகையில்இ உங்களால் முடியவில்லை என்றால் பஞ்சாயத்து போர்டுகளுக்கு உத்தரவிட்டு அந்தந்த பஞ்சாயத்துக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யோசனையை தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கூறியது.