பிரதமர் மோடியை கேள்விக்குள்ளாக்கும் பிபிசி ஆவணப்படம் இந்தியா தடை விதிப்பு.

Kumarathasan Karthigesu

2002 இல் குஜராத் மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட மதக் கலவரங்களுக்கு அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடியின் தலைமையைப் பொறுப்புக்குள்ளாக்கிக் கேள்வி எழுப்பும் பிபிசியின் ஆவணப் படம் ஒன்றுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. ருவீற்றர், யூரியூப் போன்ற சமூக வலைத் தளங்கள் அந்த வீடியோவை ஒளிபரப்புவதும் தடுக்கப்பட்டுள்ளது. ஆவண பட வீடியோக்கள், கருத்துகளை நீக்குமாறு சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. ருவீற்றர் , யூரியூப் நிறுவனங்கள் அதனை ஏற்றுக் கொண்டு வீடியோ மற்றும் பதிவுகளை நீக்கி வருகின்றன.

“இந்தியா – மோடிக்கான கேள்விகள்” (India: The Modi Question) எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு பாகங்கள் கொண்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதி கடந்த 17 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அது சமூகவலைத் தளங்களில் பகிரப்பட்டு கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்தன. அதனைத் தடுப்பதற்காக இந்திய அரசு 2021 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் அவசரகால விதிகளைப் பயன்படுத்தி ஆவணப்படத்தை ஒளிபரப்புவதற்குத்தடை விதித்துள்ளது. இத்தகவலை அரசின் ஆலோசகர் கஞ்சன் குப்தா தனது ருவீற்றர் பதிவில் வெளியிட்டிருக்கிறார்.

பிபிசி ஆவணப்படத்தை ஒரு”பிரச்சார ஆயுதம்” என்றும் “அர்த்தமற்ற விடயங்களை அது முன்வைக்கிறது” என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கருத்து வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருக்கும் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ – “காலணி ஆதிக்கத்திற்கு ஆதரவான மனோபாவம் இந்தியாவில் உள்ள சிலருக்கு இன்னமும் இருக்கிறது. அவர்கள், உச்ச நீதிமன்றத்தைவிட பிபிசியை உயர்வானதாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம், அவர்கள் அந்நிய சக்திகளை திருப்திப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் புகழுக்கு களங்கள் விளைவிக்க முயல்கிறார்கள். இந்தியாவை பலவீனப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது.”- என விமர்சித்துள்ளார்.

நரேந்திர மோடி முதல்வராக பதவியில் இருந்த சமயத்தில் குஜராத்தில் இந்து யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்றில் தீப் பற்றி 59 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்துப் பரவிய கலவரங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். முதலமைச்சர் மோடி தலைமையிலான அன்றைய குஜராத் அரசு கலவரங்களைக் கட்டுப்படுத்துவதை விடுத்து அதனைத் தூண்டி எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்று செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. கலவரங்களைக் கட்டுப்படுத்துத் தவறியதான குற்றச் சாட்டுகளை மோடி மறுத்திருந்தார்.

குஜராத் கலவரங்களில் மோடி மற்றும் அவரது அரச அதிகாரிகளுக்குள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணையாளர்கள் குழு ஒன்று அதன் 541 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2012 இல் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை முதலமைச்சரை விசாரணைக்குட்படுத்துவதற்குத் தேவையான சாட்சியங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை.

அதன் பிறகு மோடி இந்து தேசியவாத பாரதீய ஜனதா கட்சியின் தலைவராகப் பெறுப்புக்கு வந்தார். அதன் மூலம் 2014 இல் அவர் தேர்தலில் வென்று முதல் முறையாக பிரதமராக அதிகாரத்துக்கு வந்தார். 2019 தேர்தலிலும் மீண்டும் வென்றார்.

பிபிசி நிர்வாகம் தனது ஆவணப்படத்தைப் “போதிய ஆதாரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது” என்றும் மதக் கலவரங்களில் மோடிக்கு உள்ள தொடர்பு சம்பந்தமாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்படாத சில ரகசிய ஆவணங்களை பிபிசி பார்வையிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

பிபிசி ஆவணப் படம் தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரிஷி சுனாக்கிடமும் கேள்வி எழுப்பப் பட்டது. பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது கேள்விக்குக் குறுக்கிட்டுப் பதிலளித்த ரிஷி சுனாக், “குஜராத் கலவரம் தொடர்பான இங்கிலாந்து அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் எந்தப் பகுதியில் அநீதி நடந்தாலும் அதை தட்டிக் கேட்போம். ஆனால் ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு (characterisation) இழுக்கு ஏற்படுத்துவதுடன் ஒத்துப் போக முடியாது”-என்று தெரிவித்தார்.