யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தினை இன்றைய தினம் செலுத்தியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்தன் தலைமையிலான ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியினர் நேற்றைய தினம் உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை  செலுத்தினர்.

யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை யாழ்.மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தினர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவருமான சித்தார்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் ஆகியோர் வருகை தந்தனர்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியினரும் கட்டுப்பணத்தை செலுத்தினர். முன்னாள் யாழ்.மாநகர சபை மேயர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் உள்ள 17  சபைகளுக்குமான கட்டுப்பணத்தை யாழ்மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தினர்.மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கட்டுப்பணத்தை செலுத்தினர்.

கட்சியின் சட்ட ஆலோசகர் காண்டீபன் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 சபைகளுக்குமான கட்டுப்பணத்தை யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தினர்.

இதே போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான அணியினர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள  தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தின. யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.மேலும் இவற்றோடு சுயேட்சைக்குழுக்கள் சிலவும் தாம் போட்டியிடவுள்ள சபைகளுக்கான கட்டுப்பணத்தினை இன்றைய தினம் செலுத்தின.