தலாய் லாமாவின் இலங்கை விஜயம்: சீன – இலங்கை உறவுகள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்படலாம் : சீனத் தூதுவர் எச்சரிக்கை

திபெத்தின் ஆன்மிக அரசியல் தலைவர் தலாய் லாமாவின் இலங்கை விஜயத்திற்கு சீனா முற்றிலும் எதிர்ப்பினை வெளியிடும் என மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு இலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவர் ஹு வெய் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் காரணமாக சீன – இலங்கை உறவுகள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்படலாம் என சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.அண்மையில் மல்வத்து மகாநாயக்க தேரர் திம்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை சந்தித்த இலங்கையின் பதில் சீன தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தலாய் லாமா என்ற பெயரில் உள்ள நபர்களை சர்வதேச நாடுகள் வரவேற்பதை கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 14ஆவது தலாய் லாமா துறவி மட்டுமல்ல எனவும் மத ரீதியான வேடம் தரித்த அரசியல் பிரமுகர் எனவும் சீன விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு திபெத்தை சீனாவிலிருந்து பிரிக்க முயற்சிக்கும் ஒருவராக காணப்படுவதாகவும் பதில் சீன தூதர் தெரிவித்துள்ளார்.சீனா மற்றும் இலங்கை தொடர்ந்தும் ஒற்றுமையாக செயற்படுவதாகவும் அதற்கமைவாக இரு நாட்டு பௌத்த மக்களும் தலாய் லாமாவின் விஜயத்தை தடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது திபெத்தின் சுதந்திரத்தை மேம்படுத்துவதோடு, சீனா – இலங்கைக்கு இடையிலான வரலாற்று உறவுகளை பாதிக்கச் செய்யும் எனவும் பதில் தூதுவர்தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த மகா சங்கத்தினர், திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ஆனால் இது தொடர்பில் மல்வத்து பீட மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய திப்போடுவே சுமங்கல பீடாதிபதி சீன-இலங்கை உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எதனையும் செய்யப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.