இலங்கை அரசு, தமிழர் தரப்பு தேசிய பிரச்சினை தீர்வு பேச்சுக்கள் இடைநிறுத்தம்

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் அரசுத் தலைமையுடன் தமிழர் தரப்பு நேற்று முதல் நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து நடத்துவதற்கு உத்தேசத்திருந்த பேச்சுக்கள் நேற்றுடன் இடைநிறுத்தப்பட்டன. உடனடி விடயங்களை அரசு தரப்பு நிறைவு செய்வதற்கு ஒரு வார கால அவகாசம் அளித்து,, பேச்சை முடக்கியது தமிழ் கூட்டமைப்பு.

உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக கடைசி இரண்டு கூட்டங்களில் சொன்ன விடயங்களைத்தான் திரும்பவும் அரசு தரப்பினர் இப்போதும் கூறினார்கள். ஐந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யத் தயாராக உள்ளோம் என்ற பழைய கதையையே பேசினர்.காணாமல் ஆக்கப்பட்டோர் விடயங்கள் தொடர்பாக உண்மையைக் கண்டறியும் ஒரு பொறிமுறையை சட்டத்தின் மூலம் உருவாக்கப் போகின்றோம் என்றார்கள். சட்டமூலம் எங்கே என்று கேட்டால், அது இன்னும் தயாராகவில்லை, விரைவில் தயாராகும் என்றார்கள்.

நில விடுவிப்பு குறித்து கேட்டால், ஜனாதிபதி தாம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகின்றார் என்றும், அங்கு பேசி முடிவெடுக்கலாம் என்றும் கூறுகின்றார். ஆகவே, நடைமுறைக்கு ஒன்றும் வரவில்லை. இதனால் பேச்சுகள் ஒரு வாரகாலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எம்ஏ சுமந்திரன் தெரிவித்தார்.இருக்கின்ற அதிகாரப் பரவலாக்கள் விடயங்களை அப்படியே நடைமுறைப்படுத்துவது குறித்தும்  சரியான பதில் இல்லை என்றும்,மாகாணங்களின் அதிகாரங்களை சட்டங்கள் மூலம் பறித்தெடுத்தமை அவற்றைத் திருத்துவது தொடர்பான விடயத்திலும் அரசு தரப்பிடமிருந்து உருப்படியான பதில் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் ஒன்றிலும் ஒரு முன்னேற்றமும் இல்லை, எல்லாம் பிறகு, பிறகு என்றால் எப்போது முடிப்பது? – என நாம் கேள்வி எழுப்பியதாகவும், யாவற்றையும் ஒரு வார காலத்திற்குள் முடிக்கலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டது என அவர் தெரிவித்தார்.

வரும் 17ஆம் திகதி – நீதி அமைச்சர் விஜயதாஸ சுமந்திரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு, என்னென்ன செய்யப்பட்டிருக்கின்றன, எது, எது செய்யப்பட உள்ளன என்பதை விவரமாக அறிவித்தால், அதை வைத்து  பிறகு சந்திப்புகள் எப்போது நடப்பது என்பது பற்றி அறிவிக்கலாம் என தாம் தெரிவித்ததாகவும் அவர் கறிப்பிட்டார். கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி கூடிய சர்வகட்சித் தலைவர்கள் மாநாட்டை வரும் 26 ஆம் திகதி மீளவும் கூட்டலாம் என்று ஜனாதிபதி ஆலோசனை கூறியிருக்கிறார்.