தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்கும் கோரிக்கையை நிராகரித்த தமிழரசுக் கட்சி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலாதிக்கக் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி தற்போதைய கூட்டணி கட்சிகளைத் தவிர ஏனைய தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை நிராகரித்ததாக அக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு வடக்கில் உள்ள பல தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அரசியல் கூட்டணியாக போட்டியிட முன்வந்துள்ளன.

இலங்கை தமிழ் அரசு கட்சியைச் சேர்ந்தவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், தம்முடன் முறையாக இருந்த அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் அத்தகைய கூட்டணியை அமைக்க கட்சி மறுத்துவிட்டதாகவும் இருப்பினும், ரெலோ மற்றும் புளொட் ஆகியவற்றின் பாரம்பரிய கூட்டணி தொடரும் என்றார்.  தேர்தல் கூட்டணிக்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில்லை என்று எங்கள் மத்தியகுழு முடிவு எடுத்துள்ளது’ என்றும் அவர் கூறினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் ,தமிழ் மக்கள் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முன்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.