மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் செயற்பட வைக்க பாகிஸ்தான் சீனா முயற்ச்சி: இந்திய புலனாய்வுத் துறை குற்றச்சாட்டு.

பாகிஸ்தானிய உளவுப்பிரிவான இன்டர் சேவிஸஸ் இன்டலிஜனட் என்ற ஐஎஸ்ஐ அமைப்பினர் தமிழ் தேசியத்தை பயன்படுத்தி மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் செயற்பட வைக்க முயற்சிப்பதாக இந்திய புலனாய்வுத்துறை நம்புகிறது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை, தமிழகம் மற்றும் இலங்கையில் வலுப்படுத்த ஐஎஸ்ஐ முயற்சிப்பதாகவும் நெசனல் இன்வெஸ்டிகேசன் ஏஜென்சி என்ற இந்திய புலனாய்வு சேவை கருதுவதாக தெ பெடரல் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்குவதற்காக போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி, அண்மையில், தமிழகம் திருச்சிராப்பள்ளியில் உள்ள தமிழ் ஏதிகளுக்கான முகாமில் இருந்து 9 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களுக்கும், பாகிஸ்தானின் போதைப்பொருள் முக்கியஸ்தர் ஹாஜி சலீமின் உதவியுடன் ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து கேரளா கொல்லம் கடற்பரப்பின் ஊடாக போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தி வந்ததாக கூறி கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்புகள் இருப்பதாக இந்திய புலனாய்வுச்சேவை தெரிவித்துள்ளது. இதன்மூலம் 13 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை, மேலோங்கச்செய்ய போதைப்பொருள் விற்பனையை பாகிஸ்தானிய புலனாய்வுச் சேவை ஊக்குவிப்பதாக இந்திய புலனாய்வுச்சேவை  குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கு அப்பால், இலங்கையின் கரையோரப் பகுதியில் சீனா போதுமான ஆதிக்கத்தை கொண்டுள்ளதாகவும்இ எனவே தென்னிந்தியாவிலும் விடுதலைப் புலிகளின் தளத்தை மேம்படுத்த சீனா உதவ விரும்புவதாகவும் கூறப்படும் விடயம் குறித்தும் இந்திய புலனாய்வுப்பிரிவு விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெ பெடரல் செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.