காட்டில் உள்ள குயில்களிடம் குரல் இல்லை காடு கடந்த குயில்களிடம் சுருதி இல்லை. என்ன செய்யப் போகிறோம்?

- சாம் பிரதீபன் -

குரல் இழந்தலையும்
ஒரு பறவைக் கூட்டம்

வந்தனம் கூறித் தொடங்க
எனக்கு நேரம் நின்றன அல்ல.
சிரிக்க கவி வரைய
காலமும் இதுவல்ல
அவையடக்கம் கேட்க
அவையில் உமக்கும் பொழுதில்லை
உணர
நெஞ்சில் உறைக்க
நான் சொல்வேன் கொஞ்சம்
இதில் கேட்போருக்காக மட்டும்!

குரல் இழந்தலையும்
ஒரு பறவைக் கூட்டம்

குரல் இழந்தலையும்
ஒரு பறவைக் கூட்டத்தின்
மிக நீண்ட கால மௌனம் இது!

இருத்தலுக்கும் பறத்தலுக்கும் நடுவே
வேடர்களின் அம்புகளால் மட்டுமே
துளையுண்டு போன
ஒரு குருவிக் கூட்டத்தின்
குரல்வளை இது!

பிறத்தலுக்குப் பின்னரும்
இறத்தலுக்கு முன்னரும்
ஒரு முறையேனும்
சத்தமாய் பேசிவிடவேண்டும் என்ற
கூவக் குரலற்ற குயில்களிடம் இருந்து
புறப்பட்டுவிடாத சத்தத்தின் முகவரி இது!

இது குரலற்றவர்களின் மாநாடு.
இது மௌனச் சத்தத்தை
புரிந்து கொண்டவர்கள் மட்டுமே
அமர்ந்து கொள்ளும் பேச்சு மேசை.
மௌனமாய் சத்தமிடவும்
பெரும் சத்தமாய் மௌனிக்கவும்
உங்களால் முடியுமென்றால்
இந்த மேசை உங்களுக்குமானது.
நன்றாய் கால் நீட்டி அமர்ந்து கொள்ளுங்கள்!

குழந்தை ஒன்றின் முதல் மொழி குரல்.
அழுகைக் குரல்!
சடலம் ஒன்றின் கடைசி வழி குரல்.
அழுகைக் குரல்!
அழுது வருவதும்
அழ வைத்து செல்வதும் வாழ்வின் நியதி.

வாழ்வு முழுதும் அழுத இனமொன்றுக்கு
இப்போது குரல் இல்லை
நேற்றுவரை அழுது மடிந்த தேசம் ஒன்றுக்கு
இப்போது வரை குரல் இல்லை

பறக்கும் கூட்டமொன்றை
நடக்கத் தரை அழைத்து
நஞ்சேற்றி விட்ட
நயவஞ்சக கதை தெரியுமா உங்களுக்கு?
நீங்கள் நன்றாய் கால் நீட்டி அமர்ந்து கொள்ளுங்கள்!

யாதும் ஊர் என
அகலப் பார்த்துயர்ந்து
பேதம் அற்று வேதம் சொன்ன
சிட்டுக் குருவிகட்கு
பேதி மருந்தடித்து மேனி கசக்கிய
தந்திரக் கதை தெரியுமா உங்களுக்கு?
நீங்கள் நன்றாய் கால் நீட்டி அமர்ந்து கொள்ளுங்கள்!

மங்கலப் பாட்டுக்கு
மெட்டுக் கட்டிய
சின்னக் குயில்களின்
வண்ணக் குரலுக்கு
அறுவைச் சிகிச்சை செய்து அமங்கலம் ஆக்கிய
அரசியல் அவலத்தின்
ஆழக் கதை தெரியுமா உங்களுக்கு?
நீங்கள் நன்றாய் கால் நீட்டி அமர்ந்து கொள்ளுங்கள்!

உள்ளுர் முகவரியின்
உல்லாசக் கூடுகளில்
இல்லாக் கதை எழுதி
பொல்லாச் சிதை மூட்டி
உலக முகவரிக்கு ஓட விரட்டிய
வல்லூறுச் சாம்ராஜ்யம் சொல்லும்
வகை தொகைப் பெருங் கதை தெரியுமா உங்களுக்கு?
நன்றாய் கால் நீட்டி அமர்ந்து கொள்ளுங்கள்!

காற்றில் கரைந்துவிடும்
கற்பூரக் கட்டியல்ல நான்
சேற்றில் அமிழ்ந்துவிட
மண்புழு நானுமல்ல
விளக்கொளியில் அழிந்து விட
விட்டில் பூச்சியுமல்ல.
அரசியல்ப் பாம்பு வஞ்சித்து விட்ட
இன்னுமொரு ஏவாள் நான்.
எனக்குத் தேவை
இப்போது சிங்காரத் தோட்டமல்ல
ஒரு நிரந்தரத் தேசம்.
எனக்குத் தேவை
ஆண்டவன் குரலுமல்ல
என்னோடு சிரிக்க
நாலைந்து ஒப்பனையற்ற உண்மை முகங்கள்.

அன்றங்கொரு காடிருந்தது
அக் காட்டு மரத்தில் ஒரு கூடிருந்தது.
அக் கூட்டில் பாட
இந்தக் குயில்களுக்கொரு
பாட்டிருந்தது ஆடக் கூத்திருந்தது
பேசக் குரல் இருந்தது வாழ உறவிருந்தது
உண்ண உணவிருந்தது வண்ணக் கனவிருந்தது
வடக்கே தேனிருந்தது கிழக்கே திணையிருந்தது
அங்கே பாலிருந்தது இங்கே பழமிருந்தது
சொந்த இறகிருந்தது சொந்தம் பலவிருந்தது

தெற்கே பருந்திருந்தது
அதன் கையில் மாய மருந்திருந்தது
நெஞ்சில் கறையிருந்தது
குயில்ப் பாட்டில் கடுப்பிருந்தது.
இது விஜயனின் மரம் என்றது
புது வில்லங்கம் தனை எறிந்தது
குயில்ப் பாட்டை தடை செய்தது
குயில்க் கூட்டை உடைத்தெறிந்தது
உலக முகவரி எழுதும் முன்னர்
உள்ளுர் முகவரியை கிழித்தெறிந்தது
குயில்களின் கம்பீரம்
கூன் விழுந்து அடங்கிப் போனது
காடே அமைதியானது
பருந்தின்; சத்தத்தைக் காடுகள் கேட்டன.

சொந்த மொழி கேட்டன குயில்கள்
குண்டு மழை போட்டது பருந்து
எம் மரபு வழிக் குடில் என்றன குயில்கள்
மரக்கிளைகளை வெட்டிச் சரித்தது பருந்து
சத்தியாக்கிரகம் செய்தன குயில்கள்
பருந்தின் மேசையில் பேசக் குந்தின குயில்கள்
மரம் கேட்டு மெழி கேட்டு
குஞ்சு வாழ கூடு கேட்டு
கூடி வாழ உறவு கேட்டு
களி கேட்டு கஞ்சி கேட்டு
கடைசிச் சொட்டு ஆசை கேட்டு
அடிமேல் அடி வாங்கி
அந்தரப்பட்ட போது
கர்ச்சிக்கத் தொடங்கின குயில்கள்.
காடுகள் திரும்பிப் பார்த்தன
குயில்கள் கர்ச்சிப்பது
காடுகளுக்குப் புதிது
குயில்கள் கர்ச்சிப்பது
கழுகுகளுக்கு அதிர்ச்சி
குயில்கள் கர்ச்சிப்பது
வல்லூறுகளுக்கு ஆச்சரியம்
கர்ஜனையின் பிதாமகனுக்கு பேரிடி.
பாடத் தெரிந்த குயில்
பறக்கத் தெரிந்த குயில்
கர்ச்சிப்பது காடுகளுக்கு ஆபத்து என
காட்டுச் சாசனம் எழுதப்பட்டது.
பறத்தலை ஒடிக்கிறேன் என்றது ஆந்தை
பாட்டை முடிக்கிறேன் என்றது வல்லூறு
கர்ச்சனையை அழிக்கிறேன் என்றது சிங்கம்
எல்லாவற்றையும் நானே செய்ததாய்
ஒப்புக்கொள்கிறேன் என்றது பருந்து.
பெரும் காடே சேர்ந்து குயில்களை மூடிற்று

இப்போதும் நினைவிருக்கிறது
எங்கள் குயில்கள் பாடிய கடைசிப் பாட்டு.
எங்கள் குயில்கள் கட்டிய கடைசி மெட்டு

தீவுகளின் ராஜாத்தி
தீயெரியும் பேயாட்சி
தேசம் எரிகிறதே
இந்து ஆழிக் கடல் மீதிருந்து
ஊழிப் பகை மீதழிந்து
தேசம் எரிகிறது
எங்கள் தேசம் எரிகிறதே

சொந்த மொழி கேட்டிருந்தோம் ஆச்சோ
மொழி கேட்டதற்கு குண்டு மழை வீச்சோ
சொந்தம் எல்லாம் செத்தழிஞ்சு போச்சோ
இனி வாழ்வதிங்கு அர்த்தமுள்ள மூச்சோ
மண்ணின் மகனே மண்ணின் மகனே
எங்கள் தேசம் எரியுதடா
கண்ணில் வழியும் மண்ணின் வலியும்
கொண்ட பாசம் புரியுதடா

இது குயில்கள் பாடிய கடைசிப் பாட்டு
இது குயில்கள் கட்டிய கடைசி மெட்டு

இது குரலற்றவர்களின் மாநாடு.
இது மௌனச் சத்தத்தை
புரிந்து கொண்டவர்கள் மட்டுமே
அமர்ந்து கொள்ளும் பேச்சு மேசை.
மௌனமாய் சத்தமிடவும்
பெரும் சத்தமாய் மௌனிக்கவும்
உங்களால் முடியுமென்றால்
இந்த மேசை உங்களுக்குமானது.
நீங்கள் நன்றாய் கால் நீட்டி அமர்ந்து கொள்ளுங்கள்!

இப்போது குயில்களிடம் குரல் இல்லை.
காட்டில் உள்ள குயில்களிடம்
குரல் இல்லை
காடு கடந்த குயில்களிடம்
சுருதி இல்லை.
என்ன செய்யப் போகிறோம்?

இப்போது குயில்கள் இரண்டு வகை.
ஒன்று காட்டில் வாழ்வது
மற்றொன்று காடு தாண்டி மீண்டது.
இரண்டுக்கும்
இன்று சொந்தக் குரலில்லை.
இரண்டுக்கும்
இன்று சொந்தக் கூடில்லை.

காட்டில் குயில்களின் கூடுகளில்
காகங்களின் குடியேற்றம்.
குயில்களின் கிளைகளில்
பருந்துகளின் கூடாரம்.
குயில்களின் குஞ்சுகள்
குயில்க் குட்டிகள் என
நம்பவைக்கப்படுகின்றன.சுடுகளைச் சுற்றி
நீலப்படம் நிறைந்து கிடக்கிறது.
முழுநீள சினிமா நிமிர்ந்து நிற்கிறது.
மஞ்சள் பேப்பர் மது நிறை பானம்
சுயம் மறைத்துக் கிடக்கிறது.
குயில்க் குங்சுகளின் வாய்களில்
போதைவஸ்துக் குளிர்பானம்
ஊற்றப்படுகிறது.
இனி அங்கு
குரல் இருந்தாலும்
அந்தக் குயில்கள் கூவாது.

இங்கு காடு கடந்த குயில்களிடம்
சுருதி இல்லை.
சுருதியில் முன்னைய வீச்சில்லை.

ஒடி வந்த மண்ணில் எங்கள் மாந்தர்
வழி மாறி இங்கு வாழ்வதனை ஒப்பார்
சொந்த முகம் மூடி இவர் தப்பாய்
புது ஒப்பனைகள் செய்து மண்ணை விப்பார்.
மண்ணின் மகனே மண்ணின் மகனே
எங்கள் தேசம் எரியுதடா!
கண்ணில் வழியும்
மண்ணின் வலியும்
கொண்ட பாசம் புரியுதடா!

இனி குயில்கள் செய்ய வேண்டியது
ஒன்றே ஒன்றுதான்.
ஒன்றின் கையை ஒன்று பற்றி
எம்பிப் பறப்பது.
ஒன்றன் காலை ஒன்று தூக்கி
உயரப் பார்ப்பது.

குயில்களுக்கு இப்போது தேவை
விடுதலைப் போர் அல்ல!
விழுமியப் போர்.
குயில்களுக்கு இப்போது தேவை
தானைத் தலைவன் அல்ல!
தார்மீகக் கடமை.
குயில்களுக்கு இப்போது தேவை
ஆயுதக் கவசம் அல்ல!
ஆழ் மன விளக்கம்.
குயில்களுக்கு இப்போது தேவை
அவதி அவதியாய் ஒரு தீர்வு அல்ல!
அடுத்த அடி எடுத்து வைக்க
ஒரு அறுவைச் சிகிச்சை.

இது குரலற்றவர்களின் மாநாடு.
இது மௌனச் சத்தத்தை
புரிந்து கொண்டவர்கள் மட்டுமே
அமர்ந்து கொள்ளும் பேச்சு மேசை.
மௌனமாய் சத்தமிடவும்
பெரும் சத்தமாய் மௌனிக்கவும்
உங்களால் முடியுமென்றால்
இந்த மேசை உங்களுக்குமானது.
நீங்கள் நன்றாய் கால் நீட்டி அமர்ந்து கொள்ளுங்கள்!