தப்பியோடிய சுமார் 20,000 இராணுவ உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு.
இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்த பொது மன்னிப்பு காலத்தின்போது இராணுவத்தை விட்டு வெளியேறிய சுமார் 20,000 பாதுகாப்புப் படையினர் உத்தியோகபூர்வமாக சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மிக நீண்ட காலமாக விடுமுறையை அறிவிக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இந்த பொது மன்னிப்பு காலம் 2022 நவம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை அமுலில் இருக்கும்.
“அவர்களில் 19,000ற்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என பாதுகாப்பு அமைச்சின் ஊடப்பேச்சாளர் கேர்ணல் நலின் ஹேரத் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அவர்களின் சேவைப் பொறுப்புகளை உரிய முறையில் ஒப்படைப்பதற்கான நடைமுறைகளை உரிய முறையில் பூர்த்தி செய்ததன் பின்னர், அவர்கள் அனைவரையும் சட்டரீதியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
17,322 இராணுவத்தினரும், 1,145 கடற்படையினரும், 1,038 விமானப்படையினரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கேணல் ஹேரத் தெரிவித்துள்ளார். விடுமுறை எடுக்காமல் முப்படைகளிலும் பணிக்கு சமூகமளிக்காதவர்களே இவர்கள்.
பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்து வருகின்றன
வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு வருடமும் பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், 200,000ற்ற்கும் அதிகமான சிப்பாய்களைக் கொண்ட இலங்கையின் இராணுவத்தை இலங்கை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்நியச் செலாவணி குறைந்து மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை கடுமையாக முயற்சித்து வரும் நிலையிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2023 வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சுகளுக்கு 539 பில்லியன் ரூபாவும், சுகாதாரத்திற்காக 322 பில்லியன் ரூபாவும், கல்விக்காக 232 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இராணுவ மோதல் முடிவுக்கு வந்த நிலையில், இலங்கை இராணுவம் நகர திட்டமிடல் மற்றும் கட்டுமானத் துறைகள் போன்ற பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு, வடக்கு கிழக்கில் வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.
எனினும், ஒரு இராணுவ சிப்பாய் ஓய்வூதியம் பெறுவதற்கு 22 வருடங்கள் சேவையில் இருக்க வேண்டும் எனினும், 12 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சட்டப்பூர்வமாக ஓய்வூதியம் இல்லாமல் வெளியேறுவதற்கு அவர்களுக்கு முடியும்.