முட்டைகளின் விலை அதிகரிப்பு -சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என நுகர்வோர் அதிகார சபை தெரிவிப்பு.

பண்டிகை காலத்தில் நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் சந்தைகளில், சோதனை நடவடிக்கைகளை நடத்துகின்ற போதிலும் முட்டை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என நுகர்வோர் அதிகார சபை தமது சட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இதன் அடிப்படையிலேயே சில பிரதேசங்களில் முட்டைகளின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில இடங்களில் 65 ரூபாவுக்கும் முட்டை விற்பனை செய்யப்படுவதாக சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, முட்டைக்கான ஆகக்குறைந்த சில்லறை விலையை நிர்ணயித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

அந்த வர்த்தமானிக்கு அமைய, வெள்ளை முட்டையின் விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் குறித்த வர்த்தமானியை ரத்து செய்து, முட்டைக்காக ஆகக்குறைந்த சில்லறை விலையை அன்றைய தினமே நிர்ணயிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், அது இடம்பெறவில்லை.
இதனையடுத்து, முட்டைக்கான ஆகக்குறைந்த சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டிருந்த வர்த்தமானியை ரத்து செய்து கடந்த புதன்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்தது.

இதன்காரணமாக, சந்தைகளில் ஏனைய பொருட்கள் தொடர்பில் சோதனைகளை மேற்கொண்டாலும் அதிகூடிய விலைக்கு முட்டையை விற்பனை செய்யும் மற்றும் விநியோகிக்கும் வர்;த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே சில வர்த்தகர்கள் வெவ்வேறு விலைகளில் முட்டையை விற்பனை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.