தேர்தல்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுமா?
தேர்தல்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுவது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் ஆராயப்பட்டு வருவதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வட்டார ரீதியாக ஒரு வீதமும் அதற்கு மேலதிகமாக விகிதாசார முறையில் இன்னொரு வீதமும் சேர்த்துக்கொள்ளப்படுவது தொடர்பில், சென்ற முறை தமக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தனித்தனியாகப் போட்டியிட்டால், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குக் கூடுதலான உறுப்பினர்கள் கிடைக்குமா, இல்லையா? என்ற தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதேவேளை,திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பலவிதச் சிக்கல்களைக் கையாள்வதற்கு ஒரு பொறிமுறை அவசியம் என்ற அடிப்படையில் சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும், தானும் மாவை சேனாதிராஜாவும் சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார். சம்பந்தர் அதனை வெவ்வேறு விதத்தில் கையாள்வதாகக் கூறியிருப்பதால், அந்த விடயங்கள் கையாளப்படும் என நம்புகிறோம்’ என்று, சுமந்திரன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.