நியூசிலாந்து- புகைபிடிக்க தடை விதித்து புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை அந்த நாட்டு அரசு கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மக்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கு வாழ்நாள்தடை விதிக்கும் புதிய சட்டத்தை அந்த நாட்டு அரசு நேற்று நிறைவேற்றியது. ஜனவரி 1, 2009 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலை விற்கக் கூடாது என்று அந்த சட்டம் கூறுகிறது. இதன் மூலம் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

அதாவது, நியூசிலாந்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகு சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 63 ஆக இருக்கும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கு முன்பாகவே புகைபிடிக்கும் பழக்கம் மறைந்துவிடும் என்று சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர். இந்த புதிய சட்டம் நாட்டில் புகையிலை விற்க அனுமதிக்கப்படும் சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை சுமார் 6,000ல் இருந்து 600 ஆக குறைக்கிறது. மேலும் புகையிலையில் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவை குறைக்கவும் வழிவகை செய்கிறது.