வெளியாரின் தலையீடு இல்லாமல் ஒன்றுகூடி பேசி தீர்வை அடைவோம்: மீண்டும் ரணில ஆலோசனை.

கடந்த கால மனக்கசப்புக்களைப் பேசிக்கொண்டிருப்பதால் காலம்தான் வீண்விரயமாகும். வெளியாரின் தலையீடு இல்லாமல் நாம் ஒன்றுகூடி பேச்சு மூலம் தீர்வை அடைவோம். அதில் நம்பிக்கை வைத்து தமிழ்த் தலைவர்கள் செயற்படவேண்டும் என மீண்டும்ஆலோசனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டமைப்பிற்கு ஆலோசனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு பேச்சு மூலமான தீர்வு என்பது மாயக்காற்றாக மாறிக்கொண்டிருக்கும் கனவு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய ஆங்கில ஊடகத்துக்குத் தெரிவித்திருந்தார். நல்லாட்சி அரசின் காலத்தில் தமிழ்த் தரப்பின் கடும் எதிர்ப்புக்கும் மத்தியிலும், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சியில் முழுமையாக நம்பி ஈடுபட்ட ஒருவர் இவ்வாறான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தியுள்ள சூழலில், உங்களின் தீர்வு முயற்சி எவ்வாறு முன்நகரப் போகின்றது என்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் தேசிய பிரச்சினைக்குப் பேச்சு மூலம் தீர்வு காண தாம் தயாராகவுள்ளதாகவும், அதற்கான முதற்கட்டடமாக மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் விரைவில் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளநிலையில் இதில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் பங்கேற்க வேண்டும் என தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.