காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கும் நட்டஈடு வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியுதவி வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தைப் பாராட்டியுள்ள பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கும் அரசாங்கம் அவ்வாறே இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

காணாமற்போனோரின் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கருத்து வெளியிட்ட ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் எதிர்கால வாழ்விற்கு ஒரு கோடி ரூபாய் அவசியம் என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்திற்கு உதவுவதை வரவேற்றுள்ள காணாமற்போனோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர், 1971 மற்றும் 1989களில் தென்னிலங்கை களவரம் மற்றும் வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல்போனவர்களின் குடும்பங்கள் குறித்தும் அனுதாபத்துடன் அவதானம் செலுத்துவது அத்தியாவசியமான மற்றும் நியாயமான விடயமாக அமையுமென குறிப்பிட்டுள்ளார்.