ஆளுநர் மீது அனைத்து பழியையும் போட்டுவிட்டு திமுக அரசு தப்பிக்க முடியாது என அண்ணாமலை பேட்டி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க வந்தபோது பிரதமர் மோடி பாதுகாப்பில் குறைபாடு இருந்தது தொடர்பாகவும், வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை பிரதமர் வருகையின் போது, மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளில் குறைபாடு இருந்துள்ளது.பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய பாதுகாப்பு படையினர் மாநில அரசிடம் தகவல் தெரிவித்துள்ளனர் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன? என தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடை குறித்து ஆளுநரிடம் பாஜகவின் நிலைப்பாட்டை தெரிவித்து இருப்பதாகவும், அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த போதிலும் சூதாட்டத்தை தமிழக அரசு தடை செய்யவில்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விவகாரத்தில் ஆளுநர் மீது அனைத்து பழியையும் போட்டுவிட்டு திமுக அரசு தப்பிக்க முடியாது எனவும், ஆளுநர் ஒப்புதல் அளித்த அவசர சட்டத்திற்கு அரசாணையைக் கூட மாநில அரசு பிறப்பிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.