மத்திய வங்கியின் ஆளுநருக்கு 25 இலட்சம் ரூபாய் சம்பளம்-மறுக்கும் ஆளுநர் .

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் ஓய்வூதியத்துடன் 25 இலட்சம் ரூபாய் சம்பளம் பெறுவதாக வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார்.

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் மாதாந்தம் 25 இலட்சம் ரூபாய் சம்பளம் பெறுவதாகவும் அதற்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தில் ஓய்வூதியம் பெறுவதாகவும் பல அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறான கூற்றுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் பொறுப்புள்ள அரசியல்வாதிகள் இவ்வாறான பொய்யான அறிக்கையை வெளியிடும்போது அது உண்மையென எல்லா இடங்களிலும் அறிவிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

நான் IMFல் இருந்து எந்த ஓய்வூதியமும் பெறவில்லை. நான் IMFல் நாட்டின் சார்பாக இருந்த காலத்தில், எனக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டது. அவ்வளவுதான்.

ஆனால் எனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

மத்திய வங்கியில் எனது சம்பளம் மாதம் 4 இலட்சம் ரூபாய்தான். அதுமட்டுமின்றி மத்திய வங்கியின் ஆளுனர் என்ற வகையில், உத்தியோகபூர்வ கார் மற்றும் இல்லம் உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.