2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், பாராளுமன்றத்தில் இன்று சமர்பிக்கப்படவுள்ளது.

151

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்), பாராளுமன்றத்தில் இன்று (14) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.30க்கு கூடியதன் பின்னர், பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும்.

இது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவு- செலவுத் திட்டமாகும்.

இந்த ஆண்டின் இறுதி நான்கு மாதங்களுக்காக, ஜனாதிபதியால் இடைக்கால வரவு- செலவுத்திட்டம் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“நிதியமைச்சரினால் இன்று (14) சமர்ப்பிக்கப்படும் அடுத்தாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை நிவாரணம் வழங்கும் வகையிலான இலக்கை கொண்டிருக்கும்” என, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

“முழுநாட்டு சனத்தொகையில் 75 சதவீதமான மக்கள் நிவாரணத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர். அந்த மக்கள் தொடர்பில் இந்த வரவு- செலவுத் திட்டத்தில் ஆகக் கூடுதலான அவதானம் செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.

“பொருளாதார ரீதியில் நாட்டை அடுத்த வருடம் கட்டியெழுப்பும் நோக்கில், ஏற்றுக்கொள்ளப்பட்ட நிதி உபாயத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த வரவு-செலவுத் திட்டம் 2024 ஆம் வருடத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்து பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதாக அமைந்திருக்கும்” என்றார்.

இன்று (14) தாக்கல் செய்யப்படும் வரவு- செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு, நாளை (15) ஆரம்பமாகும்.  இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறும்.

வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நவம்பர் 23 ஆம் திகதியன்று ஆரம்பமாகும் இறுதி வாக்கெடுப்பு டிசெம்பர் 8ஆம் திகதியன்று இடம்பெறும்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் சமர்க்கப்படுவதால் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்துக்கு இன்றையதினம் செல்வோர் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் அறைகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">