?ஆபாசப்படம்.. ?வன்முறை.. ?துன்புறுத்தல்கள்.. ஒன்-லைனில் குழந்தைகளை பாதுகாப்போம்!

Kumarathasan Karthigesu

பாரிஸ் அமைதி மாநாட்டில் அதிபர் மக்ரோன் அறிவிப்பு.

டிஜிட்டல் பெருவெளி என்பது ஒருபோதும் சட்டத்தை மீறுகின்ற இடமாக இருந்துவிட முடியாது. இணையத் தளங்களிலும்(Internet) சமூக இணைய வலைத்தளங்களிலும் (social networks) இருந்து எங்கள் குழந்தைகளை நன்கு பாதுகாக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. -இவ்வாறு தெரிவித்திருக்கிறார் அதிபர் மக்ரோன்.ஒன்-லைன் சீரழிவுகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் முன் முயற்சியாகச் சர்வதேச கூட்டு இயக்கம் ஒன்றையும் அவர் தொடக்கி வைத்துள்ளார்.

வியாழனன்று எலிசே மாளிகையில் மிகப்பெரும் சமூக வலைத் தளங்களின் பிரதிநிதிகள், உரிமையாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், சிறுவர் பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய ஒரு மாநாட்டில் சமூகவலைத் தளங்களின் முதலாளிகளை ஒன்றிணைத்து உலகெங்கும் “ஒன்-லைனில் குழந்தைகள் பாதுகாப்பிற்கான ஆய்வகம்”(Children Online Protection Laboratory) என்ற பெயரில் அரசு சாரா அமைப்பு ஒன்றை அவர் தொடக்கி வைத்துள்ளார். இளவயதினரைப் பாதுகாக்கின்ற இந்தப் பெரு முயற்சியில் தன்னார்வ அடிப்படையில் இணைந்துகொள்ளுமாறு உலகெங்கும் உள்ள ஆர்வலர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

‘சமாதானத்துக்கான பாரிஸ் மன்றத்தின்’ ஏற்பாட்டில் எலிசே மாளிகையில் கூட்டப்பட்ட மாநாட்டில் பங்குபற்றிய சமூகவலைத் தள ஜாம்பவான்களாகிய மெற்றா (Meta) மைக்ரோசொப்ட் (Microsoft) கூகுள்(Google) ,ரிக்-ரொக் (TikTok) அமசோன் (Amazon) மற்றும் பிரான்ஸின் டெய்லி மோஷன்(Daily motion) போன்றவற்றின் பிரதிநிதிகள் இது தொடர்பான உத்தேச உலக சாசனம் ஒன்றில் ஒப்பமிடுவதற்கு இணங்கியுள்ளனர்.

மாநாட்டில் தனது துணைவியார் பிரிஜித் சகிதம் கலந்துகொண்ட அதிபர் மக்ரோன், “ஒன் – லைனில் குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது வெறுமனே பதிவுகளை நீக்கிவிடுவதுடன் நின்று விட முடியாது.

அவர்களது வயதை அடையாளம் காணுதல், இணையத்தின் ஊடாக அவர்களைத் துன்புறுத்துவோர் மற்றும் குழந்தைகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்வோர், ஆபாசப் படங்களுக்குப் பயன்படுத்துவோர் போன்றவர்களைச் சரியாக இனங் கண்டறிதல் முக்கியமாகும் “என்று தெரிவித்தார்.

2019 இல் நியூசிலாந்தில் கிறிஸ்ட்சேர்ச் (Christchurch) என்னும் இடத்தில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த சூட்டுச் சம்பவத்தை அடுத்து அந்நாட்டுப் பிரதமர் ஜெசின்டா ஆர்டேர்ன் (Jacinda Ardern), அதிபர் மக்ரோன் போன்றவர்கள் பாரிஸில் ஒன்று கூடி வன்முறையைத் தூண்டுகின்ற – வெறுக்கத்தக்க – பேச்சுக்கள் உட்படப் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டுகின்ற விடயங்கள் அடங்கிய பதிவுகளை சமூக ஊடக வலைத் தளங்களில் இருந்து உடனடியாக நீக்குகின்ற வகையிலான சாசனம் ஒன்றை உருவக்கும் முன் முயற்சியை ஆரம்பித்தனர். ஒன் லைனில் சிறுவரைப் பாதுகாக்கின்ற முயற்சியும் அதனை அடிப்படையாகக் கொண்டே தொடங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் – இள வயதினரின்- உலகம் இணையத் தளத்திலும் ஒன் லைன் தளங்களிலும் சிக்குண்டு சீரழிகின்ற விவகாரம் ஐரோப்பவில் மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பிரான்ஸின் பாடசாலை மாணவர்கள் இணைய வழியில் துன்புறுத்தப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கொலைகள் மற்றும் தற்கொலைகள் ஒன்-லைன் தளங்கள் ஊடாகத் தூண்டப்பட்டு வருகின்றன. அதிபர் மக்ரோன் இதற்கான தீர்வு முயற்சிகளை எடுப்பேன் என்று தேர்தல் காலத்தில் பரப்புரைகளில் உறுதிமொழி வழங்கியிருந்தார்.