பிரான்ஸில் தரையிறங்கிய கப்பல் அகதிகளை 11 ஜரோப்பிய நாடுகள் பகிர்ந்து ஏற்பு.

Kumarathasan Karthigesu

தீவிர தேசிய வாதிகள் சீற்றம் இத்தாலி- பாரிஸ் இடையில் அரசியல் பதற்றம் அதிகரிப்பு.

“ஓஷன் வைக்கிங் ” கப்பலில் இருந்த 230 அகதிகளும் பிரான்ஸின் தூலோன் (Toulon) கடற்படைத் துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளனர். அவர்களை அங்கு நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகள் உட்பட மனிதாபிமானப் பணியாளர்கள் ஒன்று கூடி வரவேற்றனர். ஆண்கள் பெண்கள் மற்றும் 57 சிறுவர்கள் அடங்கிய இந்த அகதிகள் லிபியாவை அண்டிய கடற்பகுதியில் மீட்கப்பட்டவர்களாவர். எரித்திரியா, சிரியா, எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் மாலி, சூடான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்கியுள்ளனர்.

இந்த அகதிகள் கப்பலை ஏற்பதற்கு இத்தாலி மறுத்துவந்ததைத் தொடர்ந்து மக்ரோன் அரசு கப்பலை பிரான்ஸின் துறைமுகத்துக்குள் வர விசேட அனுமதி வழங்கியது.

கப்பலில் வந்த அகதிகள் பெரும் மகிழ்ச்சி பொங்கத் தரையிறங்கினர். அவர்கள் அனைவருமே புகலிடம் கோர விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்துக் குடியேறிகள் தொடர்பான கடப்பாட்டுக்கு அமைய பதினொரு ஐரோப்பிய நாடுகள் அகதிகளில் 175 பேரைப் பகிர்ந்து ஏற்றுக்கொள்வதற்கு முன்வந்துள்ளன என்று உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் “ஐரோப்பாவின் ஐக்கியம் நிரூபிக்கப்பட்டுள்ளது” – என்று அவர் தனது ருவீற்றர் பதிவில் எழுதியிருக்கிறார்.

இந்த “ஓஷன் வைக்கிங்” கப்பல் விவகாரம் பிரான்ஸ் – இத்தாலி உறவில் கடுமையான அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் குடியேறிகள் தொடர்பான விவாதங்களைப் புதிதாகக் கிளப்பியுள்ளன. மக்ரோன் அரசு இவ்வாறு ஒரேசமயத்தில் பெரும் எண்ணிக்கையில் ஆபிரிக்க அகதிகளைக் கப்பலோடு ஏற்றுக் கொண்டிருப்பதை மரின் லூ பென், எரிக் செமூர் போன்ற தேசியவாதத் தலைவர்கள் கடுமையாக எதிர்த்து விமர்சித்துள்ளனர்.

படகுகள் மூலம் ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சித்த சமயம் கடலில் சிக்குண்ட அவர்களை மனிதாபிமான மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்ற “ஓஷன் வைக்கிங்” கப்பல் மீட்டிருந்தது.

சர்வதேச நியமப் படியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடப்பாட்டின் படியும் அந்த அகதிகள் கப்பலை இத்தாலி அதன் துறைமுகம் ஒன்றினுள் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் குடியேறிகள் விடயத்தில் கடுமையான நிலைப்பாடு கொண்ட இத்தாலியின் புதிய தீவிர தேசியவாதக் கட்சியின் பிரதமர் தலைமையிலான அரசு கப்பலைத் தனது கடற்பரப்புக்குள் வர அனுமதிக்கவில்லை. அதனால் கடலில் நீண்ட காலம் தரித்து நிற்க வேண்டி ஏற்பட்டது. கப்பலின் உள்ளே பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டது.

இத்தாலி இந்த அகதிகள் விடயத்தில் சர்வதேச சட்டங்களையும் ஐரோப்பியச் சட்டங்களையும் மதிக்காமல் மனிதத் தன்மையற்றுச் செயற்பட்டுள்ளது என்று பாரிஸ் குற்றம் சாட்டியது , மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் இத்தாலியைச் சாடியுள்ளனர். ஆனால் பிரான்ஸின்”ஆக்ரோஷமான” குற்றச்சாட்டுகள் “ஏற்றுக்கொள்ள முடியாதவை” , “நியாயமற்றவை” என்று இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி (Giorgia Meloni)  கடுமையான பதில் கருத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த ஆண்டில் இதுவரை 90 ஆயிரம் குடியேறிகளை இத்தாலி தனித்து வரவேற்றுள்ளது என்பதை நினைவுபடுத்திய அவர், 8 ஆயிரம் அகதிகளைப் பங்கு போட்டு ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்த ஐரோப்பிய நாடுகள் ஆக 175 அகதிகளை மாத்திரமே ஏற்றுக் கொகொள்ள முன்வந்துள்ளன – என்று குறை கூறிக் குற்றம் சுமத்தினார்.

வருடாந்தம் அதிகரித்துவருகின்ற அகதிகள் மற்றும் குடியேறிகள் எண்ணிக்கை ஐரோப்பிய நாடுகளில் யார் அவர்களைப் பொறுப்பேற்பது என்ற சிக்கலைத் தோற்வித்துள்ளது. அடிக்கடி நிகழ்கின்ற அகதிகள் படகு விபத்துகளால் மத்தியதரைக் கடல் ஒரு “இடுகாடாக”(cemetery) மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளன.