மணிக்கு110 கி.மீ. வாகன வேகம், பெரும்பான்மை மக்கள் ஆதரவு.

Kumarathasan Karthigesu

 

கடும் வேகத்தைத் தணித்து வெப்பத்தைக் குறைப்போம்.

பூமி வெப்பமடைவதைத் தடுக்கும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக நெடுஞ்சாலைகளில் வாகனங்களது ஆகக் கூடிய வேகத்தைக் குறைக்கின்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

பிரான்ஸில் ஓட்டோரூட் (l’autoroute) என்கின்ற நெடுஞ்சாலைகளில் வாகனங்களது ஆகக் கூடிய வேகம் தற்போது மணிக்கு 130 கிலோ மீற்றர்களாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதனை மேலும் குறைத்து மணிக்கு 110 கிலோமீற்றர்களாக நிர்ணயிக்க முடியுமா என்று அரசு சிந்தித்து வருகிறது. அதற்காக நாட்டு மக்களது கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பூமி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வாகன வேகக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வதற்குப் பெரும்பான்மையானவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டிருக்கின்றனர்.

கடைசியாக வெளியாகியுள்ள கருத்துக் கணிப்பு ஒன்றில் பிரெஞ்சு மக்களில் 68% வீதமானவர்கள் வேகக் கட்டுப்பாட்டை ஆதரிப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். பரிஷியன் நாளிதழ் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

பூமியைப் பாதுகாப்பதற்காக வாகன வேகத்தை மணிக்கு நூறு கிலோமீற்றர்களுக்குக் கீழே குறைக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் பேணும் அமைப்புகள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருகின்றன.

இதேவேளை, காலநிலை மாறுதலுக்கு காரணமான காபன் வெளியேற்றத்தில் பங்கு வகிக்கின்ற கால்நடைகளைக் குறைப்பதற்காக இறைச்சி உண்பதைக் குறைக்க விரும்புகிறீர்களா என்ற ஒரு கேள்விக்கு 70 வீதமானவர்கள் ஆம் என்று பதிலளித்துள்ளனர். சுமார் 25 ஆயிரம் பேரிடம் இந்தக் கணிப்பை எலபே கணிப்பாய்வு நிறுவனம் (Elabe’s survey)நடத்தியிருந்தது. அதே கருத்துக் கணிப்பில் பாவித்த நீரை மீண்டும் மறு சுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு 67 வீதமானவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.