“நாலாயிரம் டொலர் கொடுத்தே கனடாவுக்குக் கப்பல் ஏறினோம்..”

Kumarathasan Karthigesu

நாட்டில் வாழ முடியா நிலை இலங்கை அகதி தெரிவிப்பு.

வியட்நாமில் இறக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சிலரை அங்குள்ள செய்தி நிறுவனங்கள் செவ்வி கண்டுள்ளன. கப்பல் மூலம் இலங்கையில் இருந்து கனடா செல்வதற்காக முகவர்களுக்கு 4ஆயிரம் முதல் 5ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வரை தரகு பேசியே பயணத்தை ஆரம்பித்தனர் என்று அவர்களில் சிலர் கூறியுள்ளனர்.

ஆனால் எங்கிருந்து தங்கள் பயணத்தை தொடங்கினர் என்ற தகவலை அவர்கள் எவரும் விவரமாக வெளியிடவில்லை.  இலங்கை அகதிகளில் ஒருவரான 37 வயதான வி.மோகனசுவேந்தன், தான் ஒரு விவசாயி என்றும், நல்ல வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையில், கனடாவுக்குக் குடிபெயர்வதற்காக, இடைத்தரகர் ஒருவருக்கு $4,000 டொலர்கள் கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார். கப்பலில் ஓட்டை ஏற்பட்டு உள்ளே நீர் புகுவதற்கு முன்னரே உணவு, தண்ணீர் தீர்ந்து போய்விட்டன – என்றும் அவர் கூறியிருக்கிறார். மற்றொருவரான 38 வயதுடைய கேசவன் என்பவர் பயணத்துக்காக இடைத் தரகர்களுக்கு 5ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் நகரத்தில் இனியும் வாழ முடியாது என்ற நிலையிலேயே நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்தேன் – என்றும் அவர் கூறினார்.

இலங்கை இராஜதந்திரி ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிய அவர் தமது பயணத்தை விவரித்தார். முகவர் ஒருவர் (ஏஜென்சி) தனக்குக் கடவுச் சீட்டுத் தயாரித்து, அவரையும் மற்றவர்களையும் ஒக்டோபர் 9 ஆம் திகதி அன்று “லேடி ஆர் 3” கப்பலில் ஏற்றுவதற்காக ஒரு பஸ்ஸில் அழைத்துச் சென்றார் – என்று கேசவன் கூறினார்.

“கப்பல் மிகப் பழமையானது. மிகவும் சிறியது, அதில் அளவுக்கதிகமாக ஆட்கள் ஏற்றப்பட்டிருந்தனர்.கப்பலுக்குள் தண்ணீர் புகுந்ததும், அதன் தரை விரிசல் அடைந்தது. அனைவரும் பயத்தில் அலறினர். ஆனால் நாங்கள் இப்போது பாதுகாப்பாக இருக்கிறோம், எங்களை மீட்டு உதவியதற்கும், உபசரித்ததற்கும் உங்களுக்கு மிக்க நன்றி” – என்று அவர் கூறினார். -இவ்வாறு வியட்நாம் செய்தி நிறுவனமாகிய” வீஎன் எக்ஸ்பிரஸ் ” (VN Express) தெரிவித்துள்ளது.