வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை – அலி சப்ரி
வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ள 300 க்கும் மேற்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர வியட்நாம் அதிகாரிகளுடன் இராஜதந்திர தொடர்புகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகொன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் நேற்று மீட்க்கப்பட்டனர்.படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர், இலங்கை கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் தெரிவித்ததாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.