அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் 3 குழந்தைகள் உள்பட 14 பேர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள பரபரப்பு நிறைந்த சிகாகோ நகரில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், இதனை கவனித்தபடி இருந்த கருப்பு நிற ஆடம்பர ரக காரில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 3 வயது சிறுவன், 11 வயது சிறுமி மற்றும் 13 வயது சிறுவன் உள்பட 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை மோசமடைந்தும், 5 பேர் தீவிர சிகிச்சையிலும், 6 பேர் நலமுடனும் மற்றும் ஒருவரின் நிலை என்னவென தெரியவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

இவர்கள் தவிர, துப்பாக்கி சூடு நடப்பது தெரிந்ததும் உடனடியாக, அந்த பகுதியில் இருந்து தப்பியோட பெண் ஒருவர் முயன்றிருக்கிறார். ஆனால், அவர் மீது அந்த வழியே வந்த கார் ஒன்று மோதியதில் அவர் பலத்த காயமடைந்து உள்ளார். அமெரிக்காவின் கன்சாஸ் நகரில், கடந்த திங்கட்கிழமை ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது, நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலியானார். 6 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து, அதனை கட்டுப்படுத்த அதிபர் பைடன் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்தபோதும், தொடர்ந்து இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்தே வருகின்றன.