உக்ரைனுக்கு உதவும் செயற்கைக் கோள்கள் தாக்கப்படும்!
Kumarathasan Karthigesu
ரஷ்யா விடுத்த எச்சரிக்கை “நட்சத்திரப் போர்” ஆபத்து
உக்ரைனுக்கு ராணுவ நோக்கங்களில் உதவும் மேற்குலகின் செயற்கைக் கோள்கள் தாக்குதல் இலக்குகளாகக் கொள்ளப்படும் என்று ரஷ்யா முதல் முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவினதும் அதன் கூட்டணியினதும் சிவில் மற்றும் வணிக நோக்கிலான செயற்கைக் கோள்கள் உக்ரைன் போரில் சம்பந்தப்பட்டால் அவை ரஷ்யாவால் சட்ட ரீதியான இலக்குகளாகக் கருதப்படும் – என்று மொஸ்கோவில் வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
அணு ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டுக்கான வெளிவிவகார அமைச்சின் துணை இயக்குநர் கொன்ஸ்டான்டின் வொரொன்ட்சோவ்(Konstantin Vorontsov) ஐக்கிய நாடுகள் சபையில் இந்த எச்சரிக்கையை விடுத்தார் என்று ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அவர் குறிப்பாக எந்த வணிக செயற்கைக் கோள் நிறுவனத்தையும் பெயர் சொல்லி இந்த எச்சரிக்கையை விடுக்கவில்லை.
விண் வெளியில் தாழப் பறக்கின்ற செயற்கைக் கோள்களைத் தாக்கிச் சிதறடிக்கும் லேசர் வகை ஆயுதம் ஒன்றை உக்ரைன் மீதான படையெடுப்புக்கு மூன்று மாதங்களுக்கு முன்னராக ரஷ்யா பரிசோதித்திருந்தது. பழுதடைந்த தனது செயற்கைக் கோள் ஒன்றை ஓடுபாதையில் வைத்துத் தாக்கிச் சிறு துகள்களாக்கி அழித்திருந்தது. “மிக ஆபத்தான விளையாட்டு” அது என்று அமெரிக்கா அதனைக் கண்டித்து எச்சரிக்கை செய்திருந்தது.
அமெரிக்காவின் கோடீஸ்வரர் எலன் முஸ்கின் “ஸ்பேஸ்எக்ஸ்” (SpaceX) கம்பனி அதன் “ஸ்ரார்லிங்” என்ற செயற்கைக் கோள் மூலமான இணையச் சேவை (Starlink internet) வசதியை உக்ரைனுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறது. போரினால் உள்நாட்டு இணைய வசதிகளை வழங்கும் உட்கட்டுமானங்கள் அழிவுண்ட நிலையிலும் உக்ரைன் மக்களும் அதன் ராணுவமும் எலன் முஸ்க்கின் வான் வழி இணையசேவை வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். “ஸ்ரார்லிங்” செயற்கைக் கோள் நிறுவனம் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து எந்தவித நிதி உதவியையும் பெற்றுக் கொள்ளவில்லை என்று எலன் முஸ்க் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை அமெரிக்காவின் “மக்ஸர்” (Maxar)போன்ற வேறு சில செய்மதி நிறுவனங்களும் விண்வெளியில் இருந்தவாறு போர்க் காட்சிகளைப் படமாக்கி வருகின்றன. ரஷ்யப் படைகளின் நகர்வுகள் குறித்த படங்களையும் அமெரிக்க செய்மதிகள் உக்ரைனுக்கு வழங்கி வருவதாக மொஸ்கோ குற்றம் சுமத்தி வருகிறது.
ஆயுத மோதல்கள் தொடர்பான சட்டங்களின் படி அமெரிக்காவின் தனியார் செயற்கைக் கோள்கள் எதுவும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்காகுமாக இருந்தால் அதனை அமெரிக்கா தன் மீதான போராகக் கருதிப் பதிலடி வழங்கலாம்.
அவ்வாறான ஒரு நிலைமை போரை விண் வெளிக்கு விஸ்தரிப்பதுடன் ஓடு பாதையில் வலம் வந்துகொண்டிருக்கின்ற ஆயிரக்கணக்கான செய்மதிகளது பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கலாம் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
உலகில் இதுவரை ஆயுத மோதல்கள் எவற்றின் போதும் எதிரி நாடுகளது செய்மதிகள் இலக்குவைக்கப்பட்டது கிடையாது. உக்ரைன் யுத்தத்திலேயே முதல் முறையாக அவ்வாறான அச்சுறுத்தல் தோன்றியுள்ளது.
இன்றைய நவீன காலத்தில் அதிக தீவிரத் தன்மை கொண்ட (High-intensity) போர் முறைமைகளில் எதிரியைத் தடுக்க வேண்டுமானால் கடல், தரை, ஆகாய வழிகளுக்கு அப்பால் “ஸ்ரார்ஸ்வோர்” (starswars) என்கின்ற விண்வெளிப் போரும் அவசியமாகின்றது. படைகளுக்கான கட்டளைகள், பொதுமக்களுக்கான தகவல் தொடர்பாடல்களைத் துண்டித்து எதிரியை வெற்றிகொள்வதாயின் செயற்கைக் கோள் வசதிகள் அழிக்கப்படவேண்டும்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகள் விண்வெளி யுத்தம் ஒன்றை எதிர்கொள்ளும் நோக்கில் அதற்கான ஆயத்தங்களில் ஏற்கனவே இறங்கியுள்ளன. செய்மதிகளைப் பாதுகாப்பதற்கான திட்டங்களுடன் அவற்றைத் தாக்குவதற்கான ஆயுதங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் அதன் விண்வெளிப் பாதுகாப்புப் படைக் கட்டளை மையத்தை அண்மையில் நிறுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.