அணு ஆயுத அச்சுறுத்தல் குறித்து மக்ரோன் கருத்து-நாட்டையும் மக்களையும் காக்கும் கோட்பாட்டில் உறுதி என்கிறார் அவர்.
Kumarathasan Karthigesu
ரஷ்யாவின் தந்திரோபாய அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் அதிபர் மக்ரோன் முதல் முறையாகக் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
அணு ஆயுதத் தாக்குதல்களில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்கின்ற கோட்பாட்டில் மிக உறுதியாக இருக்கிறோம். அது பதிலுக்கு அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவது என அர்த்தமாகாது-என்று தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதிபர் மக்ரோன் பிரான்ஸ் – 2 தொலைக்காட்சியின் L’Evenement”நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்குப் பதிலளித்தார். உக்ரைன் போர் நிலைவரம் தொடர்பாக அப்போது நீண்ட நேரம் பேசினார்.
உக்ரைன் அதன் வான் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பிரான்ஸ் வரும் வாரங்களில் வான் பாதுகாப்புக் கவசத்தை(anti-air systems) வழங்கும் என்றும் மக்ரோன் தகவல் வெளியிட்டார்.
விளாடிமிர் புடின் அணு ஆயுதத் தாக்குதல்கள் பற்றி அடிக்கடிப் பேசி வருகிறார். ரஷ்யா தந்திரோபாய அணு ஆயுதத்தைப் பிரயோகித்தால் பிரான்ஸின் நிலைப்பாடு என்ன என்று அவரிடம் கேட்கப்பட்டது.
“நாங்கள் அணு ஆயுத அச்சுறுத்தல் பற்றி மிகக் குறைவாகவே பேசிவருகிறோம். ஆனால் எங்களிடம் அதற்கான தடுப்பு(deterrence) உள்ளது. நாட்டின் நலன்களைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில் பிரான்ஸ் அதன் அணு ஆயுதக் கொள்கையில் உறுதியாக இருக்கிறது. அணு ஆயுதப் பதற்றம் அதிகரிப்பதை நாம் விரும்பவில்லை.
“அமைதியைக் கட்டியெழுப்புவதே நமது குறிக்கோள். எனவே நாம் முயற்சிக்க வேண்டும். பேச வேண்டும். முக்கிய பங்குதாரர்கள் இருவரையும் பேச்சு மேசைக்குக் கொண்டுவர வேண்டும். தேவைப்படும்போதெல்லாம் நான் விளாடிமிர் புடினுடன் பேசுவேன்.
புடின் இந்த யுத்தத்தை நிறுத்திவிட்டு உக்ரைனின் ஆள்புல ஒருமைப்பாட்டை மதித்து மீண்டும் பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும்”. -இவ்வாறு மக்ரோன் மேலும் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, மக்ரோன் தனது ருவீற்றர் பதிவு ஒன்றில் மற்றொர் உலகப் போரை விரும்பவில்லை என்று எழுதியிருக்கிறார். உக்ரைனின் ஆள்புல ஒருமைப்பாட்டை மதிக்குமாறு அவர் புடினிடம் கோரியுள்ளார்.” பாரிஸ் உக்ரைனுக்கு உதவி வருகிறது. ஆனால் அது ரஷ்யா மீதான தாக்குதல் அல்ல “என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.