உக்ரைனை, நேட்டோவில் சேர்த்தால் மூன்றாவது உலகப்போரை சந்திக்க நேரிடும் : ரஷ்யா எச்சரிக்கை

நேட்டோவில், உக்ரைனை அனுமதிப்பது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் அலெக்சாண்டர் வெனெடிக்டோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கும் அது நன்றாக தெரியும், அதற்காகத்தான் அவர்கள் சலசலப்பை உண்டாக்கி தங்கள் மீது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனின் 4 ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்து மாஸ்கோவில் அதைக் கொண்டாடினார்.

அதன் பிறகு உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி நேட்டோவின் ராணுவக் கூட்டணியில் விரைவான உறுப்பினராக இணைவதற்கான முயற்சியை செப்டம்பர் மாத இறுதியில் மேற்கொண்டார்.ஐ.நா.பொதுச்சபை ரஷ்யாவின் இந்த இணைப்பு சட்டவிரோதமான இணைப்பு என்று கண்டித்துள்ளது. இதனால் ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைனின் மைகொலைவ் நகரைத்தாக்கின.

மேலும் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டு மேல் இரண்டு தளங்களும் முற்றிலும் தகர்க்கப்பட்டது. மேலும் ரஷ்யா, உக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியிலுள்ள ஒரு குடியேற்றத்தை வெடிகுண்டு ட்ரோன் வைத்து தாக்கியது. உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

கீவ் பிராந்தியத்தின் ஆளுநர் ஒலெக்ஸி குலேபா, இது குறித்து கூறும்போது இந்த தாக்குதல்கள் ஈரானில் தயாரிக்கப்பட்ட ‘காமிகேஸ் ட்ரோன்கள்’ மூலம் நடந்ததாகக் கூறினார். இதன் அடிப்படையில் ரஷ்யா, 3ஆம் உலகப்போருக்கான தனது பலமான எச்சரிக்கையை உக்ரைனுக்கு விடுத்துள்ளது.