பெற்றோல் நெருக்கடி நீடிக்கும் அறிகுறி-அடுத்த வாரம் வழமைக்கு திரும்பக் கூடும் – மக்ரோன்

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோக நெருக்கடி வரும் வாரம் வழமைக்குத் திரும்பிவிடலாம் என்று அதிபர் மக்ரோன் உறுதிமொழி வழங்கியுள்ளார். ஆயினும் எரிபொருள் குதங்களை முடக்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர் தொழிற்சங்கங்கள் அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கூறிப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை ஆரம்பித்துள்ளன.

அரசு கட்டாயத்தின் பேரில் பணிக்குத் திரும்பச் செய்யும் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு முயற்சித்து வருவதால் ஆத்திரமடைந்துள்ள தொழிற் சங்கங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளன.

பிரான்ஸ் – 2 தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான நேர்முக நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய அரசுத் தலைவர் மக்ரோன் உக்ரைன் போர் தொடர்பான சர்வதேச விவகாரங்கள் பற்றி விளக்கமளித்தார். உள் நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக நீடிக்கின்ற எரிபொருள் விநியோக நெருக்கடி தொடர்பாகவும் அவரிடம் அப்போது கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த மக்ரோன், “அடுத்த வாரம் நிலைமை வழமைக்குத் திரும்பி விடக்கூடும்” என்றார். ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பொறுப்புடன் நாடு இயங்குவதற்கு வழிவிட வேண்டும் வேண்டும். ஊழியர்களது கோரிக்கைகளுக்கு எரிபொருள் கம்பனிகள் செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

டோட்டல் எனெர்ஜி(TotalEnergies) எக்ஸ்ஸொன்மெபைல் (ExxonMobil) ஆகிய இரண்டு பிரதான எரிபொருள் கம்பனிகளினதும் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற எண்ணெய்க் குதங்களிலேயே வேலை நிறுத்தம் நீடிக்கிறது. இதனால் நாட்டில் சுமார் முப்பது சதவீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசல் போன்ற எரிபொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாரிஸ் உட்பட பல நகரங்களில் நிரப்பு நிலையங்களில் பெரும் வாகன வரிசைகள் காணப்படுகின்றன.

தட்டுப்பாடு நீடிக்கலாம் என்ற அச்சத்தில் சாரதிகள் அளவுக்கு அதிகமாகப் பெற்றோலை வாங்கி நிரப்ப முயற்சிப்பதாலேயே தட்டுப்பாடு மேலும் மோசமாகி வருகிறது. அதேசமயம் சாரதிகள் பெல்ஜியம் போன்ற அயல் நாடுகளில் சென்று எரிபொருள் நிரப்ப முயற்சிக்கின்றனர்.

நாட்டில் உள்ள ஏழு எரிபொருள் விநியோக மையங்களில் (oil refineries) ஆறு மையங்கள் முடக்கப்பட்டுள்ளன. சம்பள உயர்வு கேட்டு எரிபொருள் குதங்களை முடக்கி – விநியோகத்தைத் தடுத்துப் -பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்ற ஊழியர்களைக் கட்டாயத்தின் பேரில் பணிக்குத் திரும்பச் செய்யும் உத்தரவை அரசு விடுத்திருக்கிறது.

அதேசமயம் விலைவாசி உயர்வினால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வாழ்க்கைச் சுமைக்கு நிவாரணம் வழங்க மக்ரோன் அரசு உருப்படியான திட்டம் எதனையும் முன்னெடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வார இறுதியில் நாடளாவிய ரீதியிலான போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.