குழந்தையை துன்புறுத்திய பொலிஸ்; நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை.
கொழும்பு காலிமுகத்திடலில் குழந்தையை துன்புறுத்திய பொலிஸார் மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கமொன்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு – காலி முகத்திடலில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, குழந்தையுடன் வந்த தாய் ஒருவரை பொலிஸார் கைது செய்ய முயன்றனர். இதன்போது பொலிஸார் நடந்துகொண்ட விதம் சர்ச்சைகளை தோற்றுவித்த நிலையில், பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் முறைப்பாடு செய்துள்ளது.
இதன்போது சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூன அமைப்புகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.முறைப்பாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், சிறுவர்களின் உரிமைகளை மீறும் வகையில் நடந்துகொள்வதற்கான அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கியது யார் எனக் கேள்வி எழுப்பினார்.
கொழும்பு – காலி முகத்திடலில், நேற்று மாலை கடந்த சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் முயற்சித்த போது ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து 16 வயது சிறுவன் ஒருவன உள்ளிட்ட 5 பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.தனது கைக்குழந்தையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்த போது, அதற்கு அங்கிருந்தவர்கள் இடமளிக்காமல் பொலிஸாருடன் முரண்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.