உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா பதிலடி!தலைநகரில் ஏவுகணைகள் வெடிப்பு!!

Kumarathasan Karthigesu

பழிதீர்க்கும் தாக்குதல் என்று புடின் பகிரங்கமாக அறிவிப்பு.

மின்சார, தொலைத் தொடர்பு கட்டமைப்புகள் பெரும் சேதம்.

உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகளை வீசித் தாக்கியிருக்கிறது. கீவ் நகரில் பாலங்கள் உட்பட சிவில் உட்கட்டமைப்புகள் பல இலக்கு வைக்கப்பட்டுள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கிறீமியா பாலம் மீது உக்ரைன் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கான பதிலடி இது என்று அதிபர் விளாடிமிர் புடின் தொலைக்காட்சிச் செய்தி ஒன்றில் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். ரஷ்யா மீது பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்தும் மேற்கொள்ள முயற்சித்தால் பதிலடி இன்னும் கடுமையாக இருக்கும் என்று அவர் எச்சரித்திருக்கிறார். உக்ரைனின் மின்சக்தி மற்றும் தொலைத் தொடர்புக் கட்டமைப்புகள் மீது திங்கள் காலை முதற்கட்டத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கிறீமியா பாலம் மீது நடத்தப்பட்ட பெரும் வெடிகுண்டுத் தாக்குதலின் பின்னர் திங்களன்று பாதுகாப்புச் சபையைக் கூட்டிய புடின் அதன் பிறகு தொலைக்காட்சியில் தோன்றி பதிலடி பற்றிய இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் பிற நகரங்கள் பலவற்றின் மீது ரஷ்யா சுமார் 75 ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. அவற்றில் 45 ஏவுகணைகள் வழிமறித்து தடுக்கப்பட்டன என்று உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொலைத் தொடர்புகளும் மின்னும் துண்டிக்கப்பட்டுள்ளன. அவற்றின் சேதங்களைத் திருத்தி சேவைகளை மீள ஒழுங்குக்குக் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. குண்டு வீச்சுகளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக வழமைக்குத் திரும்பி இருந்த கீவ் நகரில் மீண்டும் சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.ரஷ்யாவின் குண்டு வீச்சுக்கள் எந்த வேளையிலும் தொடரலாம் என்பதால் அங்கு பதற்றமும் பீதியும் காணப்படுவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏவுகணைகள் வீழ்ந்த பகுதிகளில் தீ பரவிப் பெரும் புகை மண்டலம் எழுவதைப் படங்கள் காட்டுகின்றன. மேலும் தாக்குதலை எதிர்பார்த்துத் தலை நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைனில் சிவிலியன் இலக்குகள் மீது ரஷ்யா தாக்கியிருப்பதை அமெரிக்க அதிபர் கடுமையாகக் கண்டித்துள்ளார். பிரான்ஸின் அதிபர் மக்ரோன், “போர் மிக ஆழமான புதிய திருப்பத்தை எடுக்கிறது” என்று கூறியிருக்கிறார். கீவ் நகரைப் பாதுகாப்பதற்காக வான் பாதுகாப்புக் கவசம் (Air defense system) ஒன்றை விரைவில் உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக ஜேர்மனி உறுதியளித்துள்ளது.