பெற்றோலுக்காக பதற்றம் வேண்டாம்! நிலைமை வழமைக்கு திரும்பும் – மக்ரோன்

Kumarathasan Karthigesu

நாட்டில் தற்காலிகமாக ஏற்பட்டிருக்கும் பெற்றோல் விநியோக நெருக்கடி குறித்துப் பதற்றமடைய வேண்டாம். பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். -இவ்வாறு அதிபர் மக்ரோன் கேட்டிருக்கிறார். நாடெங்கும் எரிபொருள்களுக்குத் தட்டுப்பாடு என நினைத்து அவற்றைப் பதற்றத்துடன் வாங்கிச் சேமிப்பதற்குப் பாவனையாளர்கள் முண்டியடிப்பதை அடுத்தே அரசுத் தலைவர் இந்த அறிவிப்பை விடுத்திருக்கிறார். செக் குடியரசின் தலைநகர் ப்ராக்கில் (Prague) நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது மாநாட்டில் கலந்து கொண்ட சமயத்தில் நேற்று அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் பெற்றோல் நெருக்கடி நிலை குறித்தும் அவர் பிரஸ்தாபித்தார்.

நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் விநியோகப் பணிகள் தடைப்பட்டிருக்கிறது. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வாகன வரிசைகளைக் காணமுடிகிறது. பெற்றோலுக்குத் தட்டுப்பாடு எனப் பரவும் தகவல்களால் பலரும் தேவைக்கு அதிகமாக நிரப்பிக் கொள்ள முயற்சிப்பதால் செயற்கைத் தட்டுப்பாடு உருவாகும் நிலை தோன்றியுள்ளது.

ஏன் இந்த நிலை?

பிரான்ஸில் எரிபொருள்களை விநியோகிக்கின்ற பிரதான முகவர் நிறுவனம் டோட்டல்எனெர்ஜி (Total Energies). அதன் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து நாடு முழுவதும் உள்ள விநியோக நிலையங்களுக்குப் பெற்றோல் உட்பட எரிபொருளை விநியோகிக்கின்ற பணியாளர்கள் சம்பள உயர்வு உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்துக் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாட்டில் உள்ள டோட்டல்எனெர்ஜி (Total Energies) நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கையிருப்புப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சுமார் 15 வீதமான நிலையங்களில் எரிபொருள்கள் தீர்ந்து போயுள்ளன.

அதேசமயம், ஏனைய எரிபொருள் முகவர்களைவிட டோட்டல்எனெர்ஜி (Total Energies) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அரசு வழங்கும் விலைக் கழிவுடன் சேர்த்து மேலும் 20 சதங்கள் (20 cents) கழிவு விலையில் எரிபொருளை வழங்கி வந்தது. அந்த விலைக் கழிவை அது நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் நீக்கவுள்ளது. அதற்கு முன்பாகப் பெற்றோலைத் தேவைக்கு அதிகமாக வாங்கிச் சேமிப்பதற்குப் பாவனையாளர்கள் முண்டியடிக்கின்றனர்.

இந்த இரண்டு நிலைமைகளுமே தற்போதைய எரிபொருள் பற்றாக்குறைக்குக் காரணமாகும்.

உக்ரைன் போர் காரணமாக நாடு ஏற்கனவே எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சமயத்தில் உள்நாட்டில் இது போன்ற வேலைநிறுத்தங்கள் காரணமாகத் தோன்றியுள்ள பெற்றோல் விநியோகத் தாமதங்கள் அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

டோட்டல்எனெர்ஜி நிறுவனத்தின் தொழிற்சங்கத்தினர் விரைவில் ஓர் உடன்பாட்டுக்கு வந்து வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு விநியோகப்பணிகள் வழமைக்குத் திரும்புவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசு கேட்டிருக்கிறது.