பதற்றத்துக்கு மத்தியில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Kumarathasan Karthigesu

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் விருது பெலாரஷ்யன் நாட்டு மனித உரிமைச் செயற்பாட்டாளர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கும் (Ales Bialiatski) மற்றும் உக்ரைன், ரஷ்யா நாடுகளின் சிவில்-மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற இரண்டு அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டிருக்கிறது.

அலெஸ் பியாலியாட்ஸ்கியுடன் ரஷ்யாவின் “மெமோரியல்”(Russian NGO Memorial) மற்றும் சிவில் உரிமைகளுக்கான உக்ரைன் நிலையம்(Ukrainian Center for Civil Liberties) ஆகிய இரண்டு மனித உரிமை பேணும் அமைப்புக்களுக்கும் விருது கிடைத்திருக்கிறது.

பெலாரஸ் நாட்டு வழக்கறிஞராகிய 60 வயதான பியாலியாட்ஸ்கி, அந்நாட்டின் “வியாஸ்னா” (“Viasna”) என்ற மனித உரிமைகள் பேணும் நிலையத்தின் நிறுவுநர் ஆவார். பெலாரஸ் நாட்டின் சர்வாதிகாரி அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு (Alexander Lukashenko) எதிராக 1996 இல் அங்கு ஆரம்பிக்கப்பட்ட வீதிப் போராட்டங்களுக்காக இந்த நிலையம் தொடங்கப்பட்டிருந்தது.

பியாலியாட்ஸ்கி அங்கு சிறையில் அடைக்கப்பட்ட அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவிகளை வழங்கி வந்தவர். சிறைகளில் நடக்கும் சித்திரவதைகள் தொடர்பான தகவல்களையும் ஆவணப்படுத்தி வெளியிட்டு வந்தார். 2020 இல் பெலாரஸின் ஆட்சியாளர் நடத்திய தேர்தலில் இடம்பெற்ற அநீதிகள், முறைகேடுகள் காரணமாக அங்கு வெடித்த மக்கள் போராட்டங்களை அடுத்து பியாலியாட்ஸ்கியை அரசு தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை ஆவணப்படுத்துவதற்காக மிகச் சிறந்த முயற்சியை மேற்கொண்டுவருவதற்காகவும் அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கான சிவில் சமூகத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி நிரூபித்து வரும் செயற்பாடுகளுக்காகவும் இவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது என்று நோபல் விருதுக் குழுவின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

தனிப்பட்ட வாழ்வில் மிகப்பெரிய கஷ்டங்கள் இருந்தபோதிலும், பியாலியாட்ஸ்கி பெலாரஸில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான தனது போராட்டத்தில் ஒர் அங்குலத்தையும் விட்டுக்கொடுக்கவில்லை” என்று விருதுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று அதிபர் புடினின் பிறந்த நாள். இந்நாளில் அவரது ஆட்சியை எதிர்க்கும் அந்நாட்டின் மனித உரிமை அமைப்புக்கு நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது. புடினுக்கான ஒரு செய்தியாக இதைக் கொள்ளலாமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு “அமைதிக்காகப் பாடுபடுபவர்களுக்கே இந்த விருது” என்று நோபல் பரிசுக் குழுவின் தலைவர் பதிலளித்தார்.

உலகில் போர் மற்றும் அணு ஆயுதப் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் அமைதிக்கான அதி உயர் விருதை யாருக்கு வழங்குவது என்பதில் நோபல் விருதுக் குழு இந்த முறை தீர்மானம் எடுப்பதில் பெரும் சவால்களை எதிர்கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அச்சம் நிறைந்த பதற்றமான உலகில் வாழ்ந்துகொண்டு அமைதிப் பரிசு யாருக்கு என்பதைத் தீர்மானிப்பது மிகக் கடினமானது என்று விருதுக் குழுவில் ஒருவராகிய பெரிட் ரெய்ஸ்-அண்டர்சன் (Berit Reiss-Andersen) அண்மையில் கூறியிருந்தார்.

இந்த முறை விருது உக்ரைன் போரை முன்னிறுத்தி புடின் எதிர்ப்பாளர்களில் எவருக்கேனும் அல்லது பருவநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடுகின்ற தனி நபர்கள், அமைப்புகள் எவருக்கேனும் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி பெலாரஸின் எதிர்க்கட்சித் தலைவி

ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்கயா (Svetlana Tikhanovskaya) ரஷ்ய எதிர்ப்பாளர் அலெக்ஸி நவல்னி(Alexei Navalny), விருது வழங்குகின்ற சுவீடன் நாட்டைச் சேர்ந்த சிறுமி கிரேட்டா துன்பெர்க் (Greta Thunberg), உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கி உட்பட 251 தனி தனி நபர்களது பெயர்களும் அகதிகளுக்கான ஐ. நா. தூதரகம்(UN High Commission for Refugees), சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court – ICC) உட்பட 91 சர்வதேச நிறுவனங்களின் பெயர்களும் அமைதி விருதுக்கான தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

அல்பிரட் நோபல் (Alfred Nobel) நினைவாக ஒஸ்லோவில் அறிவிக்கப்படுகின்ற அமைதிக்கான நோபல் விருது கடந்த ஆண்டு பத்திரிக்கைச் சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்காக பிலிப்பைன்ஸ் பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா (Maria Ressa) மற்றும் அவரது ரஷ்ய சகா திமித்ரி முரடோவ் (Dmitry Muratov) ஆகிய இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டிருந்தது.