பிரான்ஸின் பெண் படைப்பாளி அன்னி எர்னோவுக்கு நோபல் பரிசு

Kumarathasan Karthigesu

பிரான்ஸின் புகழ் பெற்ற எழுத்தாளரும் இலக்கியப் பேராசிரியையும் பெண்ணியவாதியுமாகிய அன்னி எர்னோவுக்கு (Annie Ernaux) இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 82 வயதான அவரது நாவல்கள் பெரிதும் சுய சரிதைகளாக-நினைவுக் குறிப்புகளாக – எழுதப்பட்டவை.

சுவிடிஷ் அக்கடமியால் ஆண்டு தோறும் வழங்கப்படுகின்ற இலக்கியத்துக்கான நோபல் விருதை இதுவரை பெற்ற 119 பேரில் 17 ஆவது பெண் அன்னி எர்னோ ஆவார். பிரான்ஸில் மிகவும் மதிக்கப்படும் எழுத்தாளராகவும் முக்கியமான பெண் உரிமைக் குரலாகவும் விளங்குகின்ற அவரது சொந்த – சுயசரிதை – நூல்கள் மாறிவரும் சமூக – வர்க்க உறவுகளின் ஆழமான தனிப்பட்ட அனுபவங்களை, உணர்வுகளை-காதல், பாலுறவு, கருக்கலைப்பு, அவமானங்கள் – போன்றவற்றை ஆய்வு செய்கின்றன.

“எழுதிக் கொண்டிருக்கும் ஒரு பெண் அவ்வளவுதான்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றவர் எர்னோ. அதிகம் ஊடக வெளிச்சத்தை நாடாத அமைதியான படைப்பாளி எனப் புகழப்படுபவர். 1,செப்ரெம்பர் 1940 இல் பிறந்தவர். பிரான்ஸின் நோர்மென்டியில் ஒரு தொழிலாள வர்க்கக் குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அனுபவங்களே அவரது பெரும்பாலான படைப்புகளின் மூலக்கருவாக உள்ளன. விருது அறிவிக்கப்பட்ட பின்னர் கருத்து வெளியிட்ட அவர், “இதனை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகவும் அதே சமயம் எனக்கு அளிக்கப்பட்ட ஒரு பெரிய பொறுப்பாகவும் கருதுகிறேன்” எனக் கூறினார்.

எர்னோ தனது “கிளீன்ட் அவுட்” (Cleaned Out) என்ற முதல் நாவலை 1974 இல் வெளியிட்டார். அவர் தனது குடும்பத்தினரிடம் மறைத்துவந்த கருக்கலைப்புப் பற்றிய விவரணம் அது. “இது என் வாழ்க்கையின் கதை, ஆனால் சுதந்திரம் மற்றும் விடுதலையைத் தேடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பெண்களின் கதை.”-என்று அந்த நாவலைப் பற்றி அவர் பின்னாளில் குறிப்பிட்டிருந்தார். அவரை சர்வதேச அளவில் பிரபலம் பெற வைத்த படைப்பு 2008 இல் வெளியான “Les Années” என்ற நாவல் ஆகும். 2017 இல் அது “The Years” என்ற பெயரில் ஆங்கில மொழிபெயர்ப்பாக வெளிவந்தது.

“அன்னி எர்னோவின் படைப்புகள் பாலினம், மொழி மற்றும் வர்க்கம் தொடர்பான வலுவான பாகுபாடுகளால் குறிக்கப்பட்ட வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் துணிகரமாக ஆய்வு செய்கிறது”-என்று சுவிடிஷ் விருதுக் குழு தெரிவித்துள்ளது. அதியுயர் இலக்கிய விருது பிரான்ஸின் படைப்பாளிக்கு வழங்கப்பட்டிருப்பதை ஒட்டி அதிபர் மக்ரோன் தனது ருவீற்றர் பதிவில் எர்னோவைப் புகழ்ந்து பாராட்டியிருக்கிறார்.

கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு தான்சானியா நாட்டின் எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு (Abdulrazak Gurnah) வழங்கப்பட்டிருந்தது.