மொபைல் ஃபோன்கள் அனைத்துக்கும் ஒரே வகையான சார்ஜர் கட்டாயம்!
Kumarathasan Karthigesu
வீடுகளில் ஃபோன் சார்ஜர் வயர்கள் பெருகி வருகின்றன. கண்டபடி குப்பைகளுக்குள் வீசப்படுகின்றன. ஐரோப்பாவில் அடுத்த ஆண்டு முதல் இந்த நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்படவுள்ளது.
மொபைல் தொலைபேசிகள் மற்றும் சகல விதமான டிஜிட்டல் மொபைல் சாதனங்களுக்கும் ஒரே வகையான – யுஎஸ்பி-சி(USB-C) சார்ஜர்களைக் கட்டாயமாக்கும் சட்டத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றியிருக்கிறது.
பிரான்ஸின் ஸ்ரார்ஸ்பூவில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டப் பிரேரணை மீது செவ்வாய்க்கிழமை (ஒக். 4)நடைபெற்ற வாக்கெடுப்பில் மிகப் பெரும்பான்மையாக 602 உறுப்பினர்களது ஆதரவு வாக்குகள் கிடைத்தன. ஆக 13 வாக்குகள் மட்டுமே எதிராகச் செலுத்தப்பட்டன. இந்தச் சட்டம் சகல உறுப்பு நாடுகளிலும் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
அப்பிள் (Apple) உட்பட மொபைல் ஃபோன் தயாரிப்பு நிறுவனங்கள் ஐரோப்பிய மட்டத்தில் பொதுப் பாவனைக்கான சார்ஜர்களைத் (common European charger) தயாரித்து வெளியிடுவதற்கு 2024 ஆம் ஆண்டு வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது
mobile phones, tablets, e-readers, mice and keyboards, GPS (global positioning system) devices, headphones, headsets and earphones, digital cameras, handheld videogame consoles, portable speakers ஆகிய கருவிகளுக்கே பொதுவான யுஎஸ்பி-சி(USB-C) ரக சார்ஜர்கள் கட்டாயம் ஆகும்.
மடிக்கணனி போன்ற ஏனைய சில சாதனங்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்குள் பொதுவான சார்ஜர்கள் அவசியமாக்கப்படவுள்ளது.
ஐரோப்பிய தராதரத்துக்கு உட்பட்டு பொதுவான சார்ஜர்களை வெளியிட வேண்டிய கட்டாயத்தை உருவாக்கவுள்ள இந்தச் சட்டம் ஐ ஃபோன்களைத்(iPhones) தயாரித்து வெளியிடுகின்ற தொழில்நுட்பத்துறை ஜாம்பவான் நிறுவனமாகிய அப்பிள் (Apple) கம்பனிக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாவனையாளர்களது வசதி கருதியும் பெருகிவரும் இலத்திரனியல் பொருள் கழிவுகளைக் (electronics waste) கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுமே இந்தப் பொதுவான சார்ஜர்கள் திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
பொதுவான சார்ஜர் திட்டம்(USB-C connectors) பாவனையாளர்களது செலவில் மொத்தம் 250 பில்லியன் ஈரோக்களைச் சேமிக்க உதவும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு மதிப்பிட்டுள்ளது.