அணுகுண்டை வீசக் கோருகின்றார் செச்சினியத் தலைவர்.

Kumarathasan Karthigesu

உக்ரைனில் ரஷ்யப் படைகள் சந்தித்துவரும் பின்னடைவுகள் புடினின் ஆதரவாளர்களை உற்சாகமிழக்கச் செய்துள்ளன. மொஸ்கோவின் போர் முயற்சிகள் போதாது என்று குறிப்பிட்டுள்ள செச்சினியக் குடியரசின் தலைவர் ரம்ஷான் கடிரோவ் (Ramzan Kadyrov), இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்து  குறைந்த விளைவுகள் கொண்ட அணு ஆயுதங்களை(low-yield nuclear weapons) உக்ரைன் மீது பிரயோகிக்குமாறு அதிபர் புடினிடம் கேட்டிருக்கிறார்.

அத்துடன் பதின்ம வயதுகளையுடைய தனது மூன்று புதல்வர்களையும் உக்ரைன் போர்க்களத்துக்கு அனுப்பத் தயார் என்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் கூறியிருக்கிறார்.

ரஷ்ய இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலும் தற்போதைய செச்சினியக் குடியரசின் தலைவருமாகிய ரம்ஷான் கடிரோவ், அதிபர் புடினுக்கு மிக நெருக்கமானவர். அவரது “வேட்டை நாய்” என்று வர்ணிக்கப்படுபவர். உக்ரைனின் கிழக்கே டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் மிக்க லைமன்(Lyman) என்ற நகரில் இருந்து ரஷ்யப்படைகள் பெரும் இழப்புக்களுடன் பின்வாங்க நேர்ந்துள்ளது. அந்த நகரம் உக்ரைன் படைகளது முழுக் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அங்கு ரஷ்யக் கொடிகள் அகற்றப்பட்டு உக்ரைன் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

இந்தப் பின்னடைவை அடுத்தே செச்சினியத் தலைவர் ரஷ்யப்படைகளது போர்த் திட்டங்களை விமர்சித்துக் கருத்து வெளியிட்டிருக்கிறார். என்னுடைய தனிப்பட்ட கருத்தின் படி, ரஷ்யா அதன் எல்லைகளில் ராணுவச் சட்டத்தைப் பிறப்பித்து குறைந்தளவு விளைவுகள் ஏற்படுத்தும் அணு குண்டுகளை (தந்திரோபாய அணு ஆயுதங்கள்) உக்ரைன் மீது பயன்படுத்துதல் உட்பட கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும் – என்று அவர் கேட்டிருக்கிறார். ரெலிகிராம் நியூஸ் சேவை இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

ரஷ்யாவினால் கடந்த வாரம் இணைக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றாகிய கெர்சன்(Kherson) பகுதியில் உக்ரைன் படைகள் முன்னேறி வருகின்றன எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.