பயங்கரவாத தடைச் சட்டம் பயங்கரவாதத்தை உருவாக்கும் சட்டமாக மாறியுள்ளது
இலங்கையில் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் இன்று பயங்கரவாதத்தை உருவாக்கும் சட்டமாக மாறியுள்ளதாக இலங்கையின் முன்னணி வைத்திய தொழிற்சங்கத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நோயாளிகள் மருந்துகளுக்காகவும், விவசாயிகள் பசளைக்காகவும் வீதியில் இறங்கிப் போராடினால் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கை இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கும் நாட்டு மக்களை தீவிரவாதிகளாகவே அடையாளப்படுத்தியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசேடமாக இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தைப் பொறுத்தவரை தீவிரவாதிகள். நாங்கள் மின்கட்டணம் அதிகம் என தெரிவித்து வீதிக்கு இறங்கினால் தீவிரவாதிகளாக மாறி சிறையில் அடைக்கப்படுவோம். நாளை மருந்துகள் இல்லையெனத் தெரிவித்து அதனை கோரினால் அரசாங்கம் எம்மை தீவிரவாதிகள் எனத் தெரிவிக்கும், விவசாயிகள் உரத்தைக் கேட்டு போராட்டம் நடத்தினால் அவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள். ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை செயற்படுத்துகின்ற அதேவேளை, இந்த நாட்டில் தீவிரவாதிகள் யார் என்பதற்கு புதிய அர்த்தம் ஒன்றையும் தந்துள்ளது. அதாவது அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல் நிறைந்த பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு எதிரான எவரும் அவர்களின் அர்த்தப்படுத்தலுக்கு அமைய தீவிரவாதிகள். இந்த நாட்டின் அனைத்து மக்களும் தீவிரவாதிகள் ஆனால் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அவரது குழு தீவிரவாதிகள் அல்ல, ஆகவே பயங்கரவாதம் இல்லாத பயங்கரவாத தடைச் சட்டத்தினுள் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு பதிலாக பயங்கரவாதிகளை உருவாக்குகின்றனர். ஆகவே இது பயங்கரவாத தடைச் சட்டம் என்பதற்கு பதிலாக பயங்கரவாதிகளை உருவாக்கும் சட்டம் என அர்த்தப்படுத்திக்கொள்வதே சரியானதாக அமையும். என்றார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக பயங்கரவாதத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாவிடின் இலங்கையின் அனைத்து மக்களும் தீவிரவாதிகளாக மாற்றமடைய வேண்டிய சூழல் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.