மன்னாரில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத கனிய வள அகழ்வு
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் வெளிநாட்டு நிறுவனத்தால் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் கனிய வள அகழ்வு குறித்து தகவல்களை சூழலியலாளர்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளனர்.
மன்னார் தீவகப் பகுதியில் மாத்திரமன்றி கடல் பகுதியையும் உள்ளடக்கிய சுமார் 240 சதுர கிலோமீற்றர் பரப்பில் இல்மனைட் அகழ்வில் ஈடுபடுவதற்கான ஆய்வுகளை அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட டைட்டேனியம் சேன்ட் நிறுவனம் எவ்வித சட்டரீதியான அனுமதியும் இன்றி மேற்கொண்டுள்ளதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தில் நிர்வாக பணிப்பாளர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.
“மன்னார் மாவட்டத்தில் இல்மனைட் அகழ்வை நிறுத்துங்கள்” என்ற தொனிப்பொருளில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதுத் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தை மையமாக வைத்து பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாத்தளமாக மாற்றலாம் என அமைச்சர் ஒருவர் தெரிவிக்கின்றார். எனினும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டைட்டேனியம் சேன்ட் என்ற நிறுவனம் மன்னாரில் 204 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் இல்மனைட் அகழ்வில் ஈடுபடுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளது. எனினும் மன்னார் தீவகப் பகுதி 140 சதுர கிலோமீற்றர் பரப்பளவையேக் கொண்டுள்ளது. ஆகவே மன்னார் பிரதேசத்தையும் தாண்டி கடல் பிரதேசத்திலும் இந்த இல்மனைட்டை அகழ்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மணல் கனிய மணல் அகழ்வு குறித்த ஆய்வுகளுக்காக 2015 – 2019 வரையில் 3500ற்கும் அதிக துளைகள் இட்டு 400ற்கும் மேற்பட்ட மணல் மாதிரிகளை பெற்று அவற்றை தென்னாபிரிக்காவிற்கு கொண்டுச் சென்றுள்ளனர். சில இடங்களில் அத்துமீறி தனியார் காணிகளில் 12 அடி ஆழத்திற்கு துளைகள் இடப்பட்டுள்ளன. மன்னாரின் பல பிரதேசங்களில் கடல் மட்டத்தில் இருந்து கீழேயே நிலப்பகுதி அமைந்துள்ளன. ஆகவே எதிர்காலத்தில் இல்மனைட் அகழ்வால் மன்னாரில் பல பகுதிகளில் கடலில் மூழ்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. இல்மனைட் அகழ்விற்கு நிலத்தை தோண்டினால் கடல் நீர் உட்புகும் ஆபத்து காணப்படுகின்றது. இதனால் குடிநீர் அழியும் ஆபத்து காணப்படுகின்றது. அதனைவிட மீன்பிடியை நம்பியிருக்கும் மக்களும் பாதிக்கப்படலாம் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். சுரங்கப் பணியக சட்டத்திற்கு அமைய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கனியவள ஆய்விற்காக அனுமதியை வழங்க முடியாது. எனினும் குறித்த நிறுவனம் ஐந்து அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுள்ளது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் இதனை நிராகரித்துள்ளது. அவ்வாறான ஒரு அனுமதிப்பத்திரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், தனியாரிடமிருந்து அவர்கள் அதனைப் பெற்றிருந்தாலும் அவர்களால் அதனைப் பயன்படுத்த முடியாது எனவும் பணியகம் தெரிவித்துள்ளது. ஆகவே இவ்வாறான சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகமே பதிலளிக்க வேண்டும். இவ்வாறான ஒரு அகழ்வின்போது எமது சூழலியல் சட்டம் செயற்படுத்தப்பட வேண்டும். கடல் பாதுகாப்பு குறித்த உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டு அறிக்கைகள் அவசியம் எனினும் இவை எதுவும் செயற்படுத்தப்படவில்லை. இதனைவிட மன்னாரில் தமக்கு காணப்படும் திட்டத்தின் ஊடாக இலாபத்தை உழைக்க முடியுமென தெரிவித்து டைட்டேனியம் சேன்ட் நிறுவனம் அவர்களது உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக பங்குகளை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது. இலங்கையில் அனுமதிக்கப்படாத ஒரு திட்டம் குறித்து இவ்வாறு விளம்பரப்படுத்துவது சட்டவிரோத செயல் இல்லையா? என்றார்.
இந்த சட்டவிரோத மற்றும் மன்னார் மாவட்டத்திற்கு பாரிய சூழல் பாதிப்பினை ஏற்படுத்தும் செயற்றிட்டத்திற்கு அனுமதி வழங்கியமை மற்றும் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத ஆய்வுப் பணிகள் குறித்து சூழலியலாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.