ரணில் ராஜபக்ச அரசாங்கம் கல்வி தொடர்பில் இதுவரையில் இருந்து வந்த உரிமைகளை திட்டமிட்டு இல்லாது செய்கிறது
இலங்கையின் தற்போதைய ரணில் ராஜபக்ச அரசாங்கம் கல்வி தொடர்பில் இதுவரையில் இருந்து வந்த உரிமைகளை திட்டமிட்டு இல்லாது செய்வதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்க தலைவர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளின் போது சித்தியடையத் தவறும் மாணவர்கள் இலவச தொழில் பயிற்சிக்கு செல்லும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தேசிய பயிலுனர் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அதிகாரசபை உட்பட ஏனைய தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களை இணைத்து பணம் வசூலிக்கும் முறைமையை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில்-ராஜபக்ச அரசாங்கம் கல்வி தொடர்பில் இதுவரையில் இருந்து வந்த உரிமைகளை படிப்படியாக குறைத்துக்கொண்டு செல்கிறது. இது மிகவும் பாரதூரமான விடயம். ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றுகின்றனர். உயர் தரத்தில் மூன்று அல்லது மூன்றரை இலட்சம் பேர் தோற்றுகின்றனர். அவர்கள் அனைவரும் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்வதில்லை. ஆகவே தேசிய பயிலுனர் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அதிகாரசபை, நைட்டா மற்றும் ஜேர்மன் டெக் போன்ற தொழிற்கல்வி நிறுவனங்களில் தொழிற்பயிற்சிகள் இலவசமாகவே வழங்கப்பட்டன. இந்த பயிற்சிகளுக்கு அரசாங்கம் ஒரு தொகை பணத்தை வழங்கிய, போக்குவரத்து கொடுப்பனவுகளை வழங்கியது. ஆகவே பயிற்சிப்பெற்ற தொழிற்படையை உருவாக்க இந்தப் பயிற்சிகள் அவசியம். எனினும் தற்போதைய அரசாங்கம் இந்த பாடநெறிகளுக்கு கட்டணம் அறவிடத் தீர்மானித்துள்ளது. கட்டுபெத்த தொழில்துறை பொறியியல் பயிற்சி நிறுவனம் பாடத்திட்டங்களுக்கு பணத்தை அறவிடவுள்ளதாக பத்திரிகை விளம்பரத்தை பிரசுரித்துள்ளது. சாதாரணமாக கிராமங்களில் சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் வெற்றிபெற முடியாமல் போன மாணவர்கள் மாற்று வழிகள் ஊடாக கல்வியை பெற்றுக்கொள்ள முயற்சிக்கையில் இதனை பணத்திற்கு விற்பனை செய்ய முயன்றால் என்ன செய்ய முடியும். ஒட்டோமொபைல் பொறியியல் பயிற்சி நிறுவனம் கட்டணம் அறவிபடப்படும் என பத்திரிகை விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதனை யார் மேற்கொள்கின்றார்கள்? கல்வி அமைச்சே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.என்றார்.
தொழிற்பயிற்சிக்கென அமைச்சு ஒன்று கடந்தகாலங்களில் காணப்பட்ட நிலையில் தற்போது இதனை கல்வி அமைச்சின் ஒரு பிரிவாக உருவாக்கி கட்டணம் அறவிட திட்டமிடுவதன் ஊடாக இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பு காணப்படுமாயின் அதனை இல்லாது செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.