எதற்கும் அஞ்ச வேண்டாம். ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுப்படுங்கள். நாங்கள் உங்களுடன் உள்ளோம்-பா.உ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
பொலிஸ்,இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரில் பெரும்பான்மையானோர் போராட்டகாரர்களுக்கு சார்பாகவே உள்ளார்கள்.தற்போதைய அரசியல் அடக்குமுறைகள் அனைத்தும் இவ்விரு வருடத்திற்குள் நிறைவு பெறும்.
ஆகவே எதற்கும் அஞ்ச வேண்டாம். ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுப்படுங்கள். நாங்கள் உங்களுடன் உள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அனைத்து பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரது கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான நளிந்த ஜயதிஸ்ஸ,முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச்செயலாளர் புபுது ஜயகொட,ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,டலஸ் அணியினரை பிரதிநிதித்துவப்படுத்தி வசந்த யாப்பா பண்டார,உட்பட சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தற்போதைய பாராளுமன்றத்தின் ஊடாக செயற்படுத்த முடியாது.நாட்டுக்கான சிறந்த கொள்கை மற்றும் இலக்கினை உடையவர்கள் தற்போதைய பாராளுமன்றத்தில் இல்லை.
நாட்டு பிரஜை என்ற ரீதியில் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டேன்.காலி முகத்திடல் போராட்டத்திற்கு கடந்த மார்ச் மாதம் ஆதரவு வழங்கினேன்.போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவேன்.
போராட்டம் முடிவடையவில்லை.பல்வேறு நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படுவார்கள்.மக்கள் போராட்டத்திற்கு சகல தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும்.போராட்டத்தின் ஊடாகவே சிறந்த தீர்வை பெற முடியும்.
பொலிஸாரில் நூற்றுக்கு 98 சதவீதமானோர் போராட்டம் பக்கம் உள்ளார்கள்.இலாப நோக்கத்துடன் செயற்படும் ஒருசிலரின் அதிகாரம் இன்னும் இரண்டு வருட்ம் காலம் தான் செல்வாக்கு செலுத்தும்.வாஸ் குணவர்தன,அநுர சேனாநாயக்க ஆகியோர் வீழ்ந்ததை நன்கு அறிவோம்.
நிலையான சிறந்த வெற்றிக்கு அரசியல் கட்சி பேதங்களை துறந்து அனைத்து தரப்பினரும் ஒரு கொள்கையின் அடிப்படையில் செயற்பட வேண்டும்.
இராணுவத்தினரும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவார்கள்.இன்னும் இரண்டு வருடத்திற்குள் அனைத்து விளையாட்டையும் அரசாங்கம் விளையாடிக் கொள்ளட்டும் எதற்கும் அஞ்ச வேண்டாம்,போராட்டத்தில் ஈடுப்படுங்கள் உங்களுடன் நாம் உள்ளோம் என்றார்.