வேலை நிறுத்தத்தால் வான் சேவைகள் ரத்து பயணிகள் அந்தரிப்பு!
Kumarathasan Karthigesu
பிரான்ஸில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பணியாளர்கள் (air traffic controllers) மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக ஆயிரத்துக்கு மேற்பட்ட விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன. நாட்டின் எல்லைக்குள் உள்வருகின்ற, வெளிச்செல்கின்ற சுமார் ஆயிரம் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமான சேவை நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமையும் பல சேவைகள் நடைபெறாது என்பதால் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன எயார் பிரான்ஸின் 800 சேவைகளில் அரைவாசி 50 வீதமான 400 சேவைகள் வெள்ளிக்கிழமை ரத்துச் செய்யப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஏனைய சேவைகளிலும் கால தாமதம், இறுதி நேர ரத்துக்கள் ஏற்படலாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சம்பள அதிகரிப்பு, புதிதாக ஆட்சேர்ப்பு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் பிரதான தொழிற் சங்கம் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
கொரோனா பெருந் தொற்று நொய்க்குப் பின்னர் முழு அளவில் வழமைக்குத் திரும்பியுள்ள விமானப் பயணங்கள் இவை போன்ற பணிப் புறக்கணிப்புகள் காரணமாகவும் போதிய பணியாளர்கள் இன்றியும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.