சிறிலங்கா மாணவர்கள் 7பேர் கார்கீவ் நகரில் மீட்பு-ரஷ்யப்படை விலகிய பகுதியில் மனிதப் புதை புதைகுழிகள்.

Kumarathasan Karthigesu

உக்ரைனின் வட கிழக்கு கார்கீவ் (Kharkiv) பிராந்தியத்தில் சிக்குண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவர்கள் ஏழு பேர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யப் படைகளது கட்டுப்பாட்டில் இருந்த நகர் ஒன்றில் கடந்த மார்ச் மாதம் முதல் சிக்குண்டிருந்த மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை உக்ரைன் அதிபர் ஷெலென்ஸ்கி தனது நாளாந்த வீடியோ உரையில் வெளியிட்டிருக்கிறார். மாணவர்கள் ஏழு பேரும் அங்குள்ள குபியான்ஸ்க் மருத்துவக் கல்லூரியைச் (Kupyansk Medical College) சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. மாடிக் கட்டடம் ஒன்றின் கீழ் தளப் பகுதியில் அவர்கள் மறைந்து தங்கியிருந்தனர் எனக் கூறப்படுகிறது.

ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறியதை அடுத்து அந்த இடங்களில் சோதனைகள், மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அவ்வேளையில் அங்கு சிக்குண்டிருந்த வெளிநாட்டவர்கள் உட்பட சிவிலியன்கள் மீட்கப்பட்டு வருகின்றனர் என்று அதிபர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இலங்கை, இந்திய மாணவர்கள் பல நூற்றுக் கணக்கானோர் உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயின்று வந்தனர். ரஷ்யப் படையெடுப்பு கடந்த பெப்ரவரியில் ஆரம்பித்ததும் அவர்களில் பலரை அந்நாடுகள் அங்கிருந்து மீட்டிருந்தன. எனினும் சிலர் இன்னமும் ரஷ்யப்படைகளது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிக்குண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதேவேளை, கார்கீவ் நகரின் ஓரமாக உள்ள காட்டுப் பிரதேசம் ஒன்றில் மனிதப் புதை குழிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு குழிகள் தோண்டப்பட்டு அவற்றில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுவருகின்றன. சடலங்களில் சித்திரவதை செய்யப்பட்டமைக்கான  அடையாளங்கள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சித்திரவதைக் கூடங்கள் பல அங்கு இயங்கியுள்ளன என்று உக்ரைன் அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.