ஈழத்தை வென்றெடுக்க மேற்குலக நாடுகள் ஆதரவு: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவிப்பு
விடுதலைப் புலிகள் மற்றும் புலம்பெயர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராக செயற்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அமைப்புகளை எவ்வளவு விடுவித்தாலும், அவர்கள் ஈழத்தை வென்றெடுக்க போராடுவதாகவே தெரிகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு கடந்த திங்கட்கிழமை 12 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் சிறிலங்கா தொடர்பான கருத்துக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பிரேரணைக்கு 47 நாடுகள் வாக்களிக்கவுள்ளதாகவும், 23 அல்லது 24 நாடுகளின் ஆதரவைப் பெற முடியாத பட்சத்தில் அந்த பிரேரணைகளினால் சிறிலங்கா தோற்கடிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகையினால் வெற்றி பெறுவதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெற வேண்டும் என்றும், இந்தியா சிறிலங்காவிற்கு ஆதரவாக வாக்களித்தால், பல மேற்கத்திய நாடுகள், தென்னாபிரிக்க நாடுகள், கரீபியன் நாடுகள் உட்பட 10 நாடுகளின் ஆதரவைப் பெற முடியும்.அவ்வாறான ஆதரவை வழங்காமல் இந்தியா மௌனமாக இருந்தால் அந்த முன்மொழிவுகளால் சிறிலங்கா தோற்கடிக்கப்படும்.
சிறிலங்காவிற்கு எதிரான இந்தப் பிரேரணைகள் ஒக்டோபர் 6 அல்லது 7ஆம் திகதி முன்வைக்கப்பட உள்ளன.மேற்கத்திய நாடுகளின் விருப்பத்திற்கிணங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த பிரேரணைகளை கொண்டு வரும்.மேலும் சிறிலங்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த ஜெனீவா கூட்டத்தொடர் நடைபெறுவதாகத் தெரிகின்றது என்றும் சிறிலங்காவை ஒரு நாடாக தனிமைப்படுத்துவது தவறான செயல் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்பு, ஒரு நாட்டின் மனித உரிமைகளை அபிவிருத்தி செய்வதும், அதற்காக முதன்மையாக செயற்படுவதுமே தவிர, இவ்வாறான பிரேரணைகளை கொண்டுவந்து அந்த நாடுகளுக்கு எதிராக செயற்படுவது அல்ல’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.