உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகள் 6 பேருக்கு எதிராக குற்றப் பத்திரம்.

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் போது பயனப்டுத்தப்பட்டதாக கூறப்படும்  21 குண்டுகளை தயாரித்தமை, சதி செய்தமை தொடர்பில் 6 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.  அதன்படி அந்த குற்றப் பகிர்வுப் பத்திரம்,  நேற்று ( 15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க முன்னிலையில் பிரதிவாதிகளுக்கு கையளிக்கப்பட்டது.

மொஹம்மட் சிபான் சத்தார், செய்யத் அபூ மொஹம்மட் அஸ்ரப், மொஹம்மட் இஷாக் மொஹம்மட் நிலாப்தீன் அல்லது அர்ஷாத்,  குனசீலன் ரவீந்ரன் அல்லது  மொஹம்மட் இஷாக்,  ஷெய்க் மொஹம்மட் பரீக்  மொஹம்மட் பெளசி,  மொஹம்மட் மொயினுத்தீன் மூசா அல்லது அப்துல்லாஹ் ஆகிய 6  பிரதிவாதிகளுக்கே குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சினமன்  கிராண்ட் ஹோட்டலின்  தப்ரபேன் உணவகத்தில்  தற்கொலை குண்டுதாரியாக குண்டை வெடிக்கச் செய்த,   மொஹம்மட்  இப்ரஹீம் இன்ஷாப்  அஹமட்டின்  ஆலோசனைக்கு அமைய கடந்த 2018 ஜனவரி  முதலாம் திகதிக்கும் மார்ச் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட  காலப்பகுதியில்  குண்டு தயாரித்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் , பிரதிவாதிகளுக்கு எதிராக  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  குற்றச்சாட்டு  சட்ட மா அதிபரால் முன் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்ட பின்னர், முதலாவது பிரதிவாதிக்காக சட்டத்தரணி மொஹம்மட் பஸீர் ஆஜரான நிலையில்  ஏனைய ஐவர் சார்பிலும் சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் ஆஜரானார்.

பிரதிவாதிகள் சுமார் 3 வருடங்களாக விளக்கமறியலில் இருக்கும் நிலையில், பிணை தொடர்பில் இன்று ( நேற்று) வாதங்களை முன் வைக்காத போதும் அடுத்த தவணை பிணை வாதங்களை முன் வைக்க எதிர்ப்பார்ப்பதாக அவர்கள்  சட்டத்தரள்கள் மன்றின் அவதானத்துக்கு கொண்டு வந்தனர்.

இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதிபதி நவரட்ன மாரசிங்க பிரதிவாதிகளை  அடுத்த மாதம் 24 ஆம் திகதிவரை விலக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.