“உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் நிலை மோசமடைகிறது“ மனோ எம்.பி
தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 13 தமிழ் கைதிகளில் ஒருவரின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு கைதிகளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்தத் தகவலை தெரிவித்ததோடு, அவர்கள் குறித்து சட்டமா அதிபருடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்ணாவிரதம் இருக்கும் 13 பேரில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களை உணவருந்துமாறு கோரிக்கை விடுத்தேன் எனினும் அவர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். அவர்கள் தமக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். பிணை வழங்குவது குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடுமாறு எனனிடம் கோரிக்கை விடுத்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்திய சந்தர்ப்பத்தில் இந்த விடயத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்தேன். தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இருந்தது போதும், பல வருடங்களாக அவர்களது உறவினர்கள் அவர்களுக்காக காத்திருக்கின்றார்கள். அவர்களை வீட்டுக்கு அனுப்புமாறு கோருகின்றோம். ஆயுத மோதலுக்கு உதவினார்கள் என்றே இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். எனினும் வடக்கு கிழக்கில் ஆயுதம் தொடர்பில் பேச முடியாது. அதனை நிராகரித்துவிட்டார்கள். ஆயுத மோதலுக்கு வடக்கு கிழக்கில் உள்ள மக்களும் இப்போது விருப்பமில்லை. இதனை நான் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் மனதை வெற்றிக்கொள்ள வேண்டும். அரசியல் தீர்வு, அதிகாரப் பரவலாக்கல் அதற்கு காலத்தாமதம் ஆகலாம். எனினும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து மக்களின் நம்பிக்கையை வெற்றிகொள்ள வேண்டும். நாட்டில் யுத்தமொன்று இல்லை, போராட்டங்கள் இல்லை சுதந்திரம் காணப்படுகின்றது அதனை அனுபவிக்க மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.என்றார்.
2017ஆம் ஆண்டுக்கு பின்னராக காலப்பகுதியில் கைது செய்யப்பட்டு 4 வருடங்களுக்கு மேல் எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் 13 பேர் கடந்த 6ஆம் திகதி முதல் தமது விடுவிக்குமாறு அல்லது பிணை வழங்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.